மதுரையிலிருந்து சென்னைக்கு 68 பயணிகளுடன் வந்த தனியார் பயணிகள் விமானம் தரையிறங்கும் சமயத்தில் கடுமையாகக் குலுங்கியதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
இண்டிகோ விமானம்
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் (ஜூன்.05) இரவு 7.20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாரானது. இவ்விமானத்தில் மொத்தம் 68 பயணிகள் இருந்தனர்.
விமானம் சற்று தாமதமாக 7.57 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில், தொடர்ந்து இரவு 9 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக விமானம் தாழப் பறக்கத் தொடங்கியது.
20 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட விமானம்
தொடர்ந்து வேகத்தைக் குறைத்து ஓடுபாதையை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென விமானம் ஓடு பாதையில் தரை இறங்காமல் மீண்டும் வானில் பறக்க யத்தனித்தது.
அப்போது விமானம் அளவுக்கு அதிகமாக குலுங்கியதால், விமானத்தில் பயணித்த அனைவரும் பீதியில் உறைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்டு பறந்த விமானம், இரவு 9:22 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக மீண்டும் தரை இறங்கியது. விமானம் புறப்படத் தாமதமானதோடு, தரை இறக்கப்படும் நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தடங்கலால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
2 வாரங்களுக்கு முன்பும் தரையிறங்கும்போது பிரச்னை
இதே போல் கடந்த மே 20ஆம் தேதி கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமான பைலட்டின் கண்ணில் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால் விமானம் தரை இறக்கப்படும்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விமானம் வேகமாக தரையிறங்கிய நேரம் பார்த்து பைலட் இருக்கும் காக் பிட்டை நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்பட்ட நிலையில், பைலட்டுக்கு இதனால் சிறிய அளவில் கவனச் சிதறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து இண்டிகோ விமான நிலைய அதிகாரிகள் மூலம் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Nepal plane crash: நேபாள நாட்டில் நடுவானில் காணாமல்போன விமானம்; கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்