திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்

   சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  சேத்துப்பட்டு பகுதியில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் 150கும் மேற்பட்டவர்களுக்கு கொம்மனந்தல் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர் .



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மனநல மருத்துவர் மூலம் மன அழுத்தத்திற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் சில நோயாளிகள் மன இறுக்கத்துடன் இருப்பதாகவும், படிப்பதற்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர்  மணிகண்டபிரபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் சேர்ந்து தொண்டு நிறுவனத்தின் மூலமாக 500 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறிய நூலகத்தை மருத்துவமனையில் ஏற்படுத்தினர் .மேலும் நோயாளிகள் விளையாடுவதற்கு கேரம் போர்டு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது . நூலகம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உற்சாகத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.


இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபுவை தொடர்புகொண்டு பேசியபோது,


‛‛உலகத்தையே  இரண்டு வருடங்களா கொரோனா அச்சுறுத்தி  வருகிறது. தற்போது கொரோனா 2 வது அலை அதிக அளவில் நோய் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இந்த தோற்றால் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.  இதனால் தான் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.



எங்கள் கண்கணிப்பில் உள்ள கோவிட் சென்டர்களில் தினமும் சென்று நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா  என கண்கணிப்போம் . அப்போது சில நோயாளிகள் மன அழுத்தத்தில் தனியாக உக்கார்ந்து இருப்பார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு  சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த தம்பதியினர் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள்  வருத்தத்தில் தனியாக அமர்ந்து இருந்தனர். நாங்கள் அவரிடத்தில் கேட்டபோது   தங்களின் மகனின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை என வருத்தத்தில் உள்ளோம் என தம்பதியினர் கூறினர்.  இதனைத் தொடர்ந்து அங்குள்ள மருத்துவ குழுவினர் அவர்களின் சோகத்தை தீர்க்க முடிவு செய்து தம்பதியர்களுக்கு  ஆச்சிரியம் ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனையில் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தோம்.இதனால் சோகத்தில் இருந்த பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். வாட்ஸ்அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெறும் கொரோனா பற்றிய தகவல்களை அதிகளவில் படிப்பதால் எதிர்மறையான சிந்தனைகளுடன் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து மனநல மருத்துவர் புவனேஸ்வரனை வரவழைத்து, சிகிச்சை பெறுபவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் எங்களுக்கு புத்தகம்,விளையாட்டு உபகரணங்கள் இருந்தால் மன அழுத்தம் நீங்கும் என கூறினார்கள். அதனால் உதவும் விதமாக  தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் படிப்பதற்கு 500 புத்தகம் வாங்கி கோவிட் சென்டரில் சிறிய நூலகம் அமைத்தும், கேரம் போர்ட் ,செஸ் என விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்தோம். இதனால் சேத்துப்பட்டு கோவிட் சென்டரில் உள்ள நோயாளிகள் மன அழுத்தம் இல்லாமல்  மகிழ்ச்சியாக விளையாடி வருகின்றனர்,’ என தெரிவித்தார்.


 


அதற்கான ஏற்பாடுகளை செய்த ரெகன்போகே நிறுவனத்தின் குமரேசன் வடமலையிடம் கேட்ட போது: 


 



‛‛திருவண்ணாமலையில்  எங்களுடைய தொண்டு நிறுவனம் கடந்த 2016 லிருந்து மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறோம் . எங்கள் அமைப்பு மூலம் 7 ஆண்டுகால நடமாடும் நூலகம் உள்ளது. அதிலுள்ள 14 ஆயிரம் புத்தகங்கள் மூலம்  7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தி உள்ளோம் . மருத்துவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று , சேத்துப்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு அறிவியல், மருத்துவம், நாவல், உடலாரோக்கியம் என 500 புத்தகங்களை வழங்கினோம். இது  மட்டும்  இன்றி அனைத்து மருத்துவமனைகளுக்கும் புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளோம்,’ என்றார். 


இந்த புதுவித அனுபவத்தால் சேத்துப்பட்டு மருத்துவமனை, தற்போது அறிவுசார் மையமாக மாறி வருகிறது.