திருவள்ளூர் மாவட்டம், கைவண்டூர் ஊராட்சியை சேர்ந்த நேருதாசன் என்பவரது மகன் ஆகாஷ்(27), இவர் அம்பத்தூரில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த 21ம் தேதி கைப்பந்து விளையாட, நேபால் நாட்டிற்கு சென்று உள்ளார். முதல் போட்டியில் விளையாடிய பின்னர் ஓய்வு அறைக்கு சென்றாத கூறப்படுகிறது. அப்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் முயற்சியால் இன்று ஆகாஷின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், இறந்தவரின் உறவினர்கள் வந்திருந்தனர். அவரது உடல் மீது வாலிபால், அவர் ஏற்கனவே போட்டிகளில் வெற்றி பெற்று வாங்கிய கோப்பைகளை வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேபாலில் ஆகாஷ் உயிரிழந்த தகவல் கிடைத்த உடன் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து, உடலை குடும்பத்துடன் ஒப்படைக்கும் நடவடிக்கையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டார். துறை சார்பில், இதுவரை 288 உடல்களை பெற்று கொடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அளித்த பேட்டியில், “நேபாள நாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் தமிழக வீரர் ஆகாஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தது அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் உடல் நேபாளத்தில் இருந்து தற்போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உள்ளோம். தமிழக அரசு ஆகாஷின் குடும்பத்திற்கு இழப்பீடு அல்லது அரசு வேலை வாய்ப்பு தர முன்வர வேண்டும். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன் ” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்