முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.





இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.




இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் ஜாமினில் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், பிணை ஒரு இடைக்கால நிவாரணம். நீதிக்கான எங்கள் போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு நன்றி. பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.


கடந்த 2011ம் ஆண்டு பேரறிவாளன், முருகன் ,சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடி என்கின்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று ஏறத்தாழ 32 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் ஜாமீனில் சிறைவாசத்தில் இருந்து வெளிவந்து உள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் வருகை தந்த பேரறிவாளன் மக்கள் மன்றத்திற்கு நேரடியாகச் சென்று செங்கொடி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .


 




எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி என பேரறிவாளன் செங்கொடி நினைவிடத்தில் கூறி உள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதம் செங்கொடியின் நினைவு தினம் வருவதையொட்டி ,நிச்சயம் நினைவு தினத்தில் தான் பங்கேற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை ஆனதும் செங்கொடியின் நினைவு இல்லத்திற்கு வந்து மரியாதை செய்த சம்பவம் தற்பொழுது பேசும் பொருள் ஆகியுள்ளது



 செங்கொடி


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகஸ்ட்  28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார்.இவர் காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள். காஞ்சிபுரத்தில் இயங்கிய மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.



நிகழ்வு நடந்த நாள் காலையில் காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார்.