தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், ஒமிக்ரான் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பொதுப்போக்குவரத்து சேவைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், வெளியூர் செல்வதற்கான ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து ரயில்கள் மூலமாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலரும் பொதுப்போக்குவரத்து இல்லாததால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் விழா அழைப்பிதழை காட்டி உரிய ஆவணங்களுடன் பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவும், பிற காரணங்களுக்காகவும் ஊரடங்கு தினத்திலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மக்கள் பலரும் பொதுப்போக்குவரத்தின் சேவை இல்லாத காரணத்தால் மணிக்கணக்கில் ரயில் நிலையத்திலே காத்திருக்கின்றனர்.
ரயில் நிலையங்களில் இருந்து இயங்கும் வாடகை ஆட்டோக்கள், கார்கள் வழக்கத்தை விட மூன்று மடங்கு கட்டணங்கள் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், சிலர் மூன்று மடங்கு கட்டணம் அளித்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சிலர் தங்களது பகுதிகளுக்கு நடந்தே செல்கின்றனர். இன்னும் சில மக்கள் ரயில் நிலையங்களிலே காத்துள்ளனர். ஊரடங்கு தினத்தில் பொதுமக்கள் இவ்வாறு ரயில் நிலையங்களில் காத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய சாலைகள், பிரதான சாலைகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையின் உள்புற பகுதிகளில் பிற மாவட்டங்களின் கிராமப்புற பகுதிளிலும் இரு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றித்திரிந்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்