தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதலே கடும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில், முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோன்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்குடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பக்கூடிய ஆம்னி பேருந்துகள், வானகரம் பூந்தமல்லி வழியாக வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் அதிகளவு இயக்கப்படும் ஆம்னி பெருந்துகள் தற்பொழுது, அதிகளவு வண்டலூர் வெளிவட்டச் சாலையில் வரத் துவங்கி இருப்பதால், வண்டலூர் மற்றும் கிழாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஆம்னி பேருந்துகளில் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவு வாயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரமாக காத்துக் கிடக்கின்றனர். அரசு பேருந்தில் செல்பவர்களுக்கு முறையான அறிவிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் தனியார் நிறுவனம் என்பதால் ஆம்னி பேருந்துகள் வருகை குறித்து எந்தவித அறிவிப்பும் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேறு வழி இன்றி ஆம்னி பேருந்துகளை புக் செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனிய நுழைவு வாயிலில் முந்தி அடித்துக்கொண்டு, அலைமோதும் காட்சிகள் அரங்கேறியது. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஆம்னி பேருந்துகள் நின்று செல்லும் இடங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
இருக்கைகளும் சரியான அளவில் இல்லாததால் , தடுப்புச் சுவர்கள் மீதும் அழுக்கு நிறைந்த சாலைகளிலும், பயணிகள் அமர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பயணிகள் இந்த கஷ்டத்தில் சொந்த ஊர் சென்று இந்த தீபாவளி கொண்டாட வேண்டுமா என நொந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இப்பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை பெய்யாதுதால் பயணிகள் கூடுதல் சிரமத்தில் இருந்து தப்பித்து உள்ளனர்.
மாநகர சிறப்பு பேருந்துகள்:
சென்னையில் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை நகரம் உள்ளே மட்டும் இயங்கும். சென்னையில் உள்ள மண்டல கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
புகார் எண்:
தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்களை அறிவித்துள்ளது. 149 என்ற மூன்று இலக்க புதிய உதவி மைய எண் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.