காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ள சென்னை இரண்டாவது விமான நிலையத்திற்கு செல்வதற்காக இரண்டு அணுகு சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேகம் எடுக்கும் திட்ட பணிகள்
வருவாய்துறை சார்பாக அலுவலகங்கள் அமைக்கப்பட்டு நிலம் எடுப்பதற்கு தொடர்பான அனைத்து பணிகளும் வேகம் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நிலம் எடுப்பது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர் எதிர்ப்பை தெரிவித்தாலும், விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் அரசு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரந்தூர் விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்து செல்வதற்கு இரு விதமான சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு அணுகு சாலை என இரு வித அணுகு சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர், கண்ணூர், புதுப்பட்டு ஆகிய மூன்று கிராமங்கள் என கிழக்கு புற சாலையில் அமைகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, பள்ளம்பாக்கம், கொட்டவாக்கம், மூலப்பட்டு , புள்ளலூர், போந்தவாக்கம், பரந்தூர், படுநெல்லி, கண்ணன் தாங்கல், மகாதேவி மங்கலம் ஆகிய 10 கிராமங்கள் மேற்கு சாலையில் அமைகின்றன.
சாலையில் பயன்கள் என்ன ?
புதிய அணுகு சாலைகள் அமைக்கப்பட்டால் விமான நிலையத்திற்கு தேவையான சரக்குகளை கையாளுவதற்கும், விமான நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை அமைக்கப்பட்டால், வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு, இந்த சாலை எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை-திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், பரந்தூர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு கிழக்கு பகுதியில் அமைக்கப்படும் அணுகு சாலை வழியாகவும், காஞ்சிபுரம்-அரக்கோணம் வழியாக செல்லும் வாகனங்கள் பரந்தூர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு மேற்கு புற அணுகு சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் எளிதில் பரந்தூர் விமான நிலையத்தை அடைய முடியும். இதனால் பயணம் நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலை அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 10 கிராமங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 3 கிராமங்கள் என 13 கிராமங்களில் இருந்து 210 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கான தேவையான நிலங்களை எடுப்பதற்கான பணிகளை விரைவில் நிலை எடுப்பு திட்ட வருவாய் துறையினர் துவங்க உள்ளனர்.