சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.



சர்வதேச ஒப்பந்தப்புள்ளி:


இந்த அறிக்கையில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது. விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையும் தயாரிக்கும் பணி பற்றியும் விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனையும் இடம் பெற்றுள்ளது. 2069- 70 ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும். பசுமை விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்புகுதி மக்கள் 140 நாட்களுக்கு மேலாக இரவு நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப் போவதாக, அறிவிப்பு ஒன்றை பரந்தூர் போராட்ட குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டம் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு, தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வந்தனர். பெரிய அளவு போராட்டம் அறிவிப்பு வெளியான சில நாட்களில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் போராட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



மீண்டும், நடை பயண போராட்டம் 


அப்பகுதியில் எந்தவித பிரச்சனையும் நடைபெறாத வண்ணம் இருக்க, காவல்துறை 13 சோதனை சாவடிகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பணி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து மனு அளிக்க நடைப்பயணம் மேற்கொள்வதாக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். இந்நிலையில் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேச்சுவார்த்தையில், ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் ஒருங்கிணைப்பு குழு அதனை மறுத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.


இந்த பேச்சுவார்த்தை குறித்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் இளங்கோ கூறுகையில், தொடர்ந்து விளைநிலங்கள்,  நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தொடர்ச்சியாக அரசை வலியுறுத்தி வரும் நிலையில் நாளை போராட்டத்தை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதும் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அன்னூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விளைநிலங்கள் எடுக்கப்படாது என தெரிவித்த நிலையில்,  பரந்தூரில் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினர்.விமான நிலையம் அமைக்க நீர்நிலைகள் விளைநிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம், கண்டிப்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிப்போம் என தெரிவித்த நிலையில், நேற்று போராட்டம் செய்துவந்த பொதுமக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கொண்டு இருந்தனர் அப்போது வந்த அரசு அதிகாரிகள் உடனடியாக போராட்ட குழுவிடம், நடத்திய பேச்சு வார்த்தையில், நாளை(இன்று) அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.


அமைச்சருடன் பேச்சு வார்த்தை


 இந்நிலையில் இன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ,எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி 13 கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிராம மக்களின் பிரதிநிதிகள் சார்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது . இந்த பேச்சுவார்த்தையானது தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளதால் முக்கிய அதிகாரிகளும் பங்கு பெற உள்ளனர்.