சென்னை பசுமை விமான நிலையம் ( Parandur Airport Protest)
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்கள்
ஓர் ஆண்டாக கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம் , மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் போராட்டம், ஏரியில் இறங்கி போராட்டம், தினமும் இரவு நேரப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் கிராம மக்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி நடை பயண போராட்டமும் அறிவித்து, அரசு பேச்சு வார்த்தைக்கு பிறகு அதை கைவிட்டனர்.
காவல்துறை கட்டுப்பாடு
போராட்டம் துவக்கப்பட்டதிலிருந்து கிராமத்தில் காவல்துறையினரின் கட்டுப்பாடு ஆரம்பத்தில் அதிகரித்தது. இரவு நேரங்களில் போராட்டங்களில் ஈடுபடும் கிராமப்பகுதிகளில் பூத் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். படிப்படியாக காவல்துறையினரின் கண்காணிப்பு தளர்த்தப்பட்டாலும், தொடர்ந்து காவல்துறையினரின் கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக இந்த போராட்டத்தை அதிக அளவு பாதிக்கப்படும் கிராமமாக உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் முன் நின்று நடத்தி வருகின்றனர். கோவிலில் நடைபெறும் திருவிழாக்களை கூட போராட்டக் களமாக மாற்றி போராடி வருகின்றனர்.
ஒரு வருடத்தை கடந்த போராட்டம்
இந்த நிலையில் 26-7-2023 அன்றுடன் கிராம மக்களின் போராட்டம் ஒரு வருடத்தை கடந்துள்ளது. இவனை முன்னிட்டு நேற்று ஏகனாபுரம், கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் முன்பு அறவழி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பொதுமக்கள் இடையே, கலந்துரையாடிய டிடிவி தினகரன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் .
கிராம மக்கள் சொல்வது என்ன ?
போராட்டத்தின் பொழுது கிராம மக்கள் வேண்டாம் எங்களுக்கு ஏர்போர்ட் வேண்டாம். விவசாய நிலத்தை அழித்து அதன் மீது எதற்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏர் கலப்பை போதும்; ஏர்ப்போர்ட் எதற்கு? என கேள்வியை முன்வைத்தும் கிராம மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓராண்டு கடந்த இந்த போராட்டம் நடைபெற்றாலும், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.