காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பாரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம்,சிங்கல்படி உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் போராட்டம்
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 13 கிராமத்தைச் சேர்ந்தவர்களும் 363வது நாளாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள கிராம தேவதையான எல்லை அம்மன் கோவிலின் ஆடி மாத திருவிழாவை தீ மிதி திருவிழா ஒட்டி கிராமம் முழுவதும் சீரியல் லைட் பல்பில் விமானத்தை சின்னமாக வைத்து எதிர்ப்பு தெரிவித்து, கோவில் முன்பு கிராம மக்கள் மத்திய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் திருவிழாவை கூட தங்களுடைய போராட்டமாக கிராம மக்கள் மாற்றி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பசுமை விமான நிலையம்
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டத்தில் ஏகனாபுரம் மக்கள்
ஆரம்பம் முதலே அதிக அளவு பாதிப்பு ஏற்படும் என கூறப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாய நல கூட்டமைப்பு சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாலை மற்றும் இரவு நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டமானது, 364 வது நாள் எட்டியுள்ளது.