ஜெயலலிதாவின் சொல்படியே அனைத்து பணிகளையும் செய்தேன் என்று வைகோ குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார். 

Continues below advertisement

2011 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பன்னீர்செல்வம் தனக்கு எதிராக செய்த தவறுக்காகதான் அதன் பலனை தற்போது அனுபவித்து வருகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, வைகோவின் குற்றச்சாட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கொடுத்துள்ளார். ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனியின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வைகோவின் குற்றச்சாட்டு, செங்கோட்டையன் கொடுத்த பேட்டிக்கு பதிலளித்தார்.

Continues below advertisement

செய்தியாளர்களிடம் வைகோ குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் அளித்த பதில்

ஜெயலலிதா பேசுமாறு கூறியதையே நான் பேசியிருக்கிறேன். அவர் சொல்படியே அனைத்து பணிகளையும் நான் செய்தேன். ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகாலம் உடனிருந்து பணியாற்றி வந்துள்ளேன். கடந்த 2011 இல் நடந்ததை இப்போது வைகோ பேசவேண்டிய அவசியம் என்ன?. தன் மீது குற்றச்சாட்டுகளை கூறினாலும் வைகோ மீதான அன்பு, மரியாதை குறையாது என்று பதிலளித்தார்.

அதிமுக ஒன்றிணைய பாஜக விருப்பம்

கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில்தான் செங்கோட்டையன் ஈடுபட்டார். அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுத்த முயற்சி வெற்றி பெறும். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விரும்புகின்றனர். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் என்னுடன் பேசி வருகின்றனர். 

விதிகளை மாற்றிய எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் எம்ஜிஆர் உருவாக்கிய விதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். தொண்டர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமையை மீட்கும் குழுதான் நாங்கள். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.

வைகோ பேசியது என்ன?

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது, 12 இடங்கள் தான் கொடுப்போம் என என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஓ.பன்னீர் செல்வம்,செங்கோட்டையன் ஜெயக்குமார் தெரிவித்தார்கள். ஆனால் இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து வைகோ கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி விட்டார்கள்.

நான் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். அப்போது எனக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செய்த தவறுக்காக தான் அதன் பலனை தற்போது ஓ.பன்னீர் செல்வம் அனுபவித்து கொண்டு இருக்கிறார். ஆனால் எனக்கு 15 சட்டமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யா சபா இடமும் வழங்க ஜெயலலிதா தயாராக இருந்தார் என்று பிற்காலத்தில் எனக்கு தகவல்கள் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜெயலலிதா எனக்கு அருமையான ஒரு கடிதம் எழுதி இருந்தார். பிறகு என்னை நேரடியாகவும் சந்திக்க வந்தார். எம் ஜி ஆர் காக கூட ஜெயலலிதா வெளியில் இறங்கி பேசியது இல்லை. ஆனால் உங்களுக்காக இறங்கி இருக்கிறார் என என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கூறியாதாகவும் வைகோ குறிப்பிட்டார்.

சிலரின் சதி செயல்களால் வரவேண்டிய கூட்டணி வராமல் போய்விட்டது. இன்று வரை திமுக பற்றி ஒரு சொல் கூட விமர்சனம் செய்யாத கூட்டணி கட்சி என்றால் அது மதிமுக தான் என வைகோ தெரிவித்தார்.