தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழையானது, பெய்து வந்தது. குறிப்பாக மாண்டஸ் புயலின் தாக்கத்தின் காரணமாக, மூன்று நாட்களில் 20 சென்டிமீட்டருக்கு அதிகமான மழை பெய்துள்ளது. அதிக மழை காரணமாக காஞ்சிபுரத்தில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காட்சியளித்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு, காமாட்சியம்மன் அவென்யு பகுதியில், மழை காரணமாக தண்ணீர் தேங்கி கொசு பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையில், ஒரே தெருவை சேர்ந்த 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதே காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், விஜயன் மற்றும் பிரியா தம்பதியினர் ஆகியோரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, சத்வெக் சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கைக்குழந்தை காய்ச்சலால் அவதிப்பட்டதை கண்ட பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகிய பொழுது, குழந்தைக்கு டெங்கு இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதனை எடுத்த உடனடியாக , பரிசோதனை செய்து பார்த்ததில் கை குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதுகுறித்து உடனடியாக சென்னை போரூரில், உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை மேல் சிகிச்சைக்காக பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 13ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைக்குழந்தைக்கு நேற்று மதியம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது என பெற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் இருந்துள்ளது, இந்த நிலையில் டெங்கு தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர். இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், அந்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், கொசு அழிப்பான் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் முகாம் அமைத்து பொதுமக்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர், ரவீந்திரன் நாடார். இவரது இளைய மகள் நிஷாந்தினி (வயது18). இவர் பொன்னேரியில் உள்ள ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மழையால் கல்லூரி விடுமுறை விடப்பட்ட தினத்தில் தனது வீட்டிற்கு வந்திருந்தார். அவரது வீட்டில் அவருடைய அக்கா மகா சுபாஷினி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்தார்.
இந்நிலையில் அக்கா மூலம் தங்கை நிஷாந்தினிக்கும் டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. நிஷாந்தினிக்கு காய்ச்சல் அதிகமாகி உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் வெள்ளை அணுக்கல் குறைந்து காய்ச்சல் அதிகமாகியது. மயக்க நிலைக்கு சென்ற அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நிஷாந்தினி பரிதாபமாக இறந்தார்.