செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடையே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு  2 பாலாறு பாலங்கள் உள்ளன. இந்த இரு பாலத்தின் தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் இணைப்பு ரப்பர் மற்றும் இரும்பு சட்டம் பழுதானதால், கடந்த சில மாதங்களாகவே இந்த பாலத்தின் மேல் பகுதியில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டது.


இதனால் பாலத்தின் மீது போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு சில விபத்துகளும் ஏற்பட்டிருந்தது. இந்தப் பாலத்தை சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும்  பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தொடங்கினர்.


அதன்படி முதல் கட்டமாக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய பாலாற்று பாலத்தை கடந்த மாதம் முழுவதுமாக மூடப்பட்டு சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சீரமைக்கும் பணியானது  முழுமையாக சீரமைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு போக்குவரத்திற்காக பாலத்தை திறந்து விடப்பட்டுள்ளது .


அதனைத் தொடர்ந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மற்றொரு பாலத்தை, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழுமையாக மூடப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பாலத்தில் உடைந்துபோன இடங்களை சீரமைப்பது இரண்டு பாகங்களில் உள்ள இணைப்புகளை இரும்பு கம்பிகள் மூலம் இணைத்து அவற்றுக்கு நடுவே நபர் வைப்பது உள்ளிட்ட பணிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.


தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த பணியின் காரணமாக ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு சென்னையிலிருந்து திருச்சி செல்பவர்களுக்கு மட்டுமே ஒரு பாலம் திறந்து இருந்தது. திருச்சியிலிருந்து சென்னை செல்பவர்கள் மூன்று மாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. கிராம சாலைகள் வழியாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய பேருந்துகளை திருப்பிவிடப்பட்டதால் ஆங்காங்கே பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களாக சலசலப்பு காணப்பட்டது.


இந்நிலையில் அனைத்து பணிகளும் தற்போது முடிவடைந்து,  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் திறக்கப்பட்டுள்ளது. பாலம் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால் இரண்டு வழி பாலம் மூலமாக பேருந்துகள் தற்போது செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். சுமார் 40 நாட்களுக்குப் பிறகு.சென்னை திருச்சி மற்றும் திருச்சி சென்னை ஆகிய இரண்டு பழங்களும் செயல்பட துவங்கியுள்ளது