சென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமே இல்லை. எங்கு திரும்பினாலும் டிராஃபிக்தான். அந்த அளவிற்கு வாகனங்கள் அதிகரித்துவிட்டன. அதனால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் புதிய விதிமுறைகளை கொண்டுவர, போக்குவரத்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


போதிய பார்க்கிங் வசதி இல்லாத சென்னை மாநகரம்


சென்னையில், ஜனத்தொகை பெருகிக்கொண்டே வருவதுபோல், வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக, பைக் மற்றும் கார் வாங்குவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால், அவ்வாறு வாங்கப்படும் பைக் மற்றும் கார்களை நிறுத்த, போதுமான பார்க்கிங் வசதி இல்லை. இதனால், சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.


2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னையில் 92 லட்சம் கார்கள் இருந்தன. அப்படியானால், அடுத்த 2 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கார்கள் வாங்கப்பட்டிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். அதனால், தற்போது இன்னும் பல லட்சம் கார்கள் அதிகரித்திருக்கும். ஆனால், சென்னையில், பொது இடங்களில், வெறும் 14,000 கார்களை நிறுத்த மட்டுமே வசதி உள்ளது. அதாவது, முறையாக பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்கள். மற்ற லட்சக்கணக்கான வாகனங்கள் அனைத்துமே சாலை ஓரங்களில்தான் நிறுத்தப்படுகின்றன. இதனால், முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாக ஆகிவிடுகிறது. 


புதிய விதிகளை அமல்படுத்த பரிந்துரைத்த போக்குவரத்து ஆணையம்


இந்த பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இனி கார் வாங்கினால், பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என விதிகளை வகுக்க, அரசுக்கு, சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


அவர்களின் இந்த பரிந்துரையை, மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம், ஒரு வாகனத்தை பதிவு செய்வதற்கு, பார்க்கிங் வசதி இருப்பதை அந்த உரிமையாளர் உறுதி செய்து அதற்கான ஆவணங்களையும் காண்பிக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எத்தனை வாகனங்களை பதிவு செய்கிறோமோ, அத்தனைக்குமான பார்க்கிங் வசதியை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், சில வீடுகளில் பல கார்கள் இருக்கும், ஆனால் அத்தனை கார்களையும் நிறுத்த இடமில்லாமல், மற்ற கார்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிடுவார்கள். ஆனால், இனி அப்படி செய்ய முடியாது.


சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், தமிழ்நாடு அரசு புதிய விதிகளை கொண்டுவருவது குறித்து கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளது.


அப்படியானால், சென்னையில் இனி நெரிசல் இல்லாத சாலைகளை பார்க்கலாம். ஆனால், வாகனங்கள் வாங்குவோர், பார்க்கிங்கை எப்படி உறுதி செய்யப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை...