சென்னை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி - பூஞ்சேரி சாலை இடையே 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைப்பதற்கு ரூ.80 லட்சத்தில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அதிகளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Continues below advertisement


அதேபோல் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்துள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னைக்கு வருகின்றனர். பேருந்துகள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.


காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். இதேபோல் மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.


குறிப்பாக வார இறுதிநாள், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிகவும் அதிகமா இருக்கும். அதிலும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், அச்சரப்பாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் சில சமயங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது.


சென்னைக்கு வரும் வாகனங்கள் மறைமலை நகர் ஜிஎஸ்டி சாலையிலிருந்து தாம்பரம் கடப்பதற்கு பல மணி நேரங்கள் ஏற்படும். இதனை தொடர்ந்து சென்னை – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சென்னை – தாம்பரம் – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி – பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்த புதிய சாலையை அமைப்பதற்கு ரூபாய் 80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் செங்கல்பட்டிற்கு முன்பாக மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து இ.சி.ஆரில் உள்ள பூஞ்சேரி வழியாக பெரும்பாலான வாகனங்களை திருப்பிவிட முடிவு செய்துள்ளனர்.


திண்டிவனத்தில் இருந்து செல்லும் சாலையில் மதுராந்தகம் அடுத்து கருங்குழி என்ற பகுதி வருகிறது. அங்கிருந்து செங்கல்பட்டு செல்லாமல் வலதுபுறம் திரும்பி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரிக்கு செல்லலாம். இதனால் பைபாஸ் சாலையில் வரும் மக்கள் இ.சி.ஆர் சாலை நோக்கி செல்ல வேண்டுமென்றால் இந்த சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஜி.எஸ்.டி சாலையை இ.சி.ஆர் சாலையுடன் இணைக்கும் இந்த வழியானது வெகுவாக சென்னை போக்குவரத்து நெரிசலை மாற்றியமைக்கும். சென்னை நகருக்குள் வந்து அடையாறு, திருவான்மியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு கருங்குழி - பூஞ்சேரி வழித்தடம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சிரமமின்றி சென்னையை விட்டு வெளியே செல்லவும், மீண்டும் சென்னை திரும்பவும் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.