ரியல் எஸ்டேட் சட்டத்தில் அதிரடி மாற்றம் - புதிய 2.0 பதிப்பு பரிந்துரை
வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் 2016 - ல் நிறைவேற்றப்பட்டது. இதை அமல்படுத்த, மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், ரியல் எஸ்டேட் ஆணையம் மற்றும் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காமல் தாமதப்படுத்தும் நிறுவனங்கள் மீது மக்கள் இந்த ஆணையத்தில் புகார் செய்கின்றனர்.
கிடப்பில் போடப்படும் நிலை
இதில் மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கியும், கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த உத்தரவுகளை கட்டுமான நிறுவனங்கள் செயல்படுத்துவதில்லை. இதனால் ரியல் எஸ்டேட் சட்டப்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் கிடப்பில் போடப்படும் நிலை ஏற்படுகிறது.
மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஆணையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையில், மத்திய ஆலோசனை குழு, 2018 - ல் அமைக்கப்பட்டது. நாடு முழுதும் ரியல் எஸ்டேட் சட்டத்தை அமல்படுத்தும் நடைமுறைகளை இக்குழு ஆய்வு செய்து வருகிறது.
மாவட்ட கலெக்டர் - சிவில் நீதிமன்றத்திற்கு இணையாக அதிகாரம்
இது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் அவ்வப்போது பரிந்துரைகளையும் குழு வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுதும் ரியல் எஸ்டேட் ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த, மாவட்ட கலெக்டர், சிவில் நீதிமன்றத்திற்கு இணையாக அதிகாரம் ஆணையங்களுக்கு இருக்க வேண்டும்.
சட்டத்தை திருத்தி அமைக்கும் பணிகள்
இந்த சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் நிலையிலும் நாடு முழுதும், 4.80 லட்சம் வீடு கட்டும் திட்டங்கள் தாமதமாகி உள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டத்தின், 2.0 என்ற புதிய பதிப்பை உருவாக்க இக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் சட்டத்தை திருத்தி அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.