சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு டெல்லியை சேர்ந்த ஒருவரின் பெயரில் 6 பாா்சல்களை அனுப்ப பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த பார்சல்களில் ஊட்டச்சத்து மாத்திரைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், பாா்சல்களில் உள்ள செல்போன் எண்களை தொடா்பு கொண்டனா். ஆனால் அந்த செல்போன் எண்கள், அதில் இருந்த முகவரி அனைத்துமே போலியானவை என்பது தெரியவந்தது.

 



இதையடுத்து அந்த 6 பாா்சல்களையும் பிரித்து பாா்த்தனா். அந்த பாா்சல்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்தன. 6 பார்சல்களில் மொத்தம் 7,990 மாத்திரைகள் இருந்தன. இந்த மாத்திரைகள் உடல் வலிமை மற்றும் சக்திக்காக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றை போதை மாத்திரைகளாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மாத்திரைகள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் இந்திய அரசு தடை விதித்து உள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்புவற்கும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதியுடன் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் தடையை மீறி வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி நடந்துள்ளது.

 

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், போதை பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, 7,990 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். போலி முகவரியில் இந்த போதை மாத்திரை பாா்சல்களை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற டெல்லி நபரை தேடி வருகின்றனா். அதேபோல் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து யோகா மசாஜ் பந்து மற்றும் சைவ சாலட் மிக்சர் என்று குறிப்பிடப்பட்டு சென்னைக்கு வந்த 2 பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பாா்த்தனா். அந்த பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். 2 பாா்சல்களில் இருந்து 1 கிலோ 225 கிராம் உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.



 

சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் ஒரே நாளில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகள், கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயா் ரக கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது