சென்னை பெருநகர நிர்வாகம், கவுன்சிலர்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அம்மா உணவகங்களுக்கு புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 


அம்மா உணவகம்


சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இந்த அம்மா உணவகங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவுகளை வழங்குவது அனைவருக்கும் தெரிந்ததே. இதன்மூலம் ஏழை மக்கள் பலர் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர். இட்லி இன்றுவரை ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவை 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு பசி போக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஆட்சி மாறிய பின்னர் கிடைக்குமா என்று நினைத்த நேரத்தில் அதற்கு பெயர் மாற்றம் செய்யாமல் திமுக அரசு நடத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த புதிதில் சில அம்மா உணவகங்கள் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டன என்ற செய்திகள் வந்தன. பிறகு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.



பணியாளர்கள் யார்


சென்னை மாநகரில் பல அம்மா உணவகங்கள் உள்ளன, இந்த அம்மா உணவகங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பல பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது எழுந்துள்ள சர்ச்சை, இந்த பணியாளர்களை நியமிப்பவர்கள் யார், எதன் அடிப்படையில் அங்கு வேலை செய்கிறார்கள் என்று எழுந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: படிச்சுப் படிச்சே நான் வயசாளி ஆயிடுவேன்... கெஞ்சிய குழந்தை உருகிய நெட்டிசன்கள்


கவுன்சிலர் எழுப்பிய கேள்வி


இந்த கேள்வியை ஒரு கவுன்சிலர் எழுப்பி, அதில் நடக்கும் முறைகேடுகளை சென்னை மேயர் ப்ரியா ராஜனிடம் கூற, இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் ஜிசிசி கவுன்சிலர்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அம்மா உணவகங்களுக்கு புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 



புதிய பணியாளர்கள்


கடந்த வியாழக்கிழமை 102-வது வார்டின் கவுன்சிலர் ராணி, தனது வார்டில் உள்ள கேண்டீன்கள் எதிர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் பணிக்காக நிரப்பப்படுகிறது என்பது பற்றி கருத்து தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு உண்மை எனில் கவுன்சிலரின் புகார் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும் மேயர் குறிப்பிட்டார். கவுன்சிலர்களிடம் மனு அளிக்கப்பட்டு, தகுதியானவர்களை அம்மா உணவகங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேயர் கேட்டுக்கொண்டார். சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சமையல் பொருட்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.