இந்தியாவின் சிறந்த கட்டமைப்பு வசதிகளில் நெடுஞ்சாலையும் ஒன்று.இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக இருக்கிறது. மத்திய அரசு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் விதமாக சுங்கச்சாவடிகளை அமைத்து வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது.


சுங்கக்கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமல்:


ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக்கட்டணங்களை மத்திய அரசு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் தொடர்ந்து வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி முதல் நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.



ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தால் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவும் நேற்றுடன் நிறைவு பெற்றதால், இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கக்கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரையிலும், மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூபாய் 100 முதல் ரூபாய் 400 வரையிலும் உயர்த்தப்பட உள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


வாகன ஓட்டிகள் வேதனை:


நாடு முழுவதும் மொத்தம் 1228 சுங்கச்சாவடிகள் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான சுங்கச்சாவடிகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.


தொடர்ந்து சுங்கக்கட்டணம் உயர்ந்து கொண்டே போவது வாகன ஓட்டிகள், மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


பரனூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு  


சென்னையிலிருந்து தென்மாவட்டம் செல்பவர்கள்,  பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய சாலையாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில்  செங்கல்பட்டு அருகே இருக்கும் பரனூர் சுங்கச்சாவடி பல்வேறு சர்ச்சைகள் நிறைந்தசுங்கச்சாவடியாக இருந்து வருகிறது.  இந்த சுங்கச்சாவடி  தனது ஆயுட்காலத்தை கடந்து  செயல்பட்டு வருவதாக  பல தரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.


பரனூர் சுங்கச்சாவடி கட்டண   எவ்வளவு ?


தற்பொழுது பரனூர் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்துள்ளது.   பரனூர் சுங்கச்சாவடியில்,  ஒரே நாளில் திரும்பி வரும் கார்களுக்கு கட்டணம் 105  ரூபாயிலிருந்து   ரூ 5 அதிகரித்து 110 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சிறிய ரக  சரக்கு வாகனங்களுக்கும் இதேபோன்று  ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 175 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.  பேருந்து/  டிரக் ஆகியவற்றுக்கு  365,  வணிக சரக்கு வாகனங்கள்  விலை  ஒரு வழி பாதைக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு  265 ரூபாயும்,  இரு வழி  பயணத்திற்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டு 400 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.


ஓவர் சைஸ்  வாகனங்களுக்கு  ஒரு வழி பயண கட்டணம் பத்து ரூபாய் உயற்ற 465 ரூபாயும், இரு வழி பயணத்திற்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 695 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.



இதுபோக உள்ளூர் மாதாந்திர  கட்டணமும் உயர்த்தப்பட்டு 340 தற்போது வசூலிக்கப்படுகிறது. மேலும் பாஸ்ட் ட்ராக் இல்லாமல் செல்லும்  வாகனங்கள் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் முடிந்தவுடன் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது,  பல்வேறு தரப்பினர்  இடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது