சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தாங்கள் சந்திக்கும் சமூக புறக்கணிப்பு குறித்து மாணவி திவ்யா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. இதையடுத்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ப்ரியா, திவ்யா மற்றும் தர்ஷினி ஆகியோரை நேரில் அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.



இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவடியில் உள்ள நரிக்குறவர் காலனிக்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அப்போது நாசரின் செல்போன் மூலம் காணொளி வாயிலாக நரிக்குறவர் மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் ஆவடி நரிகுறவர் காலனிக்கு நேரில் வருவதாக முதல்வர் உறுதி அளித்தார்.தற்போது அரசு பட்ஜெட் உள்ளிட்ட வேலைகள் இருப்பதாகவும் விரைவில் வருவதாகவும் தெரிவித்தார்.





நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் உணவு தருவீர்களா என முதல்வர் கேட்டதற்கு கரி விருந்து போடுவதாக நரிக்குறவர்கள் உற்சாகத்துடன் பதில் அளித்தனர். மாணவர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்தார்.





அப்பகுதி மக்களிடம் அமைச்சர் செல்போன் உதவியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய முதலமைச்சரின் இந்த பேச்சால் அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் அந்த பகுதியில் இருந்த சிறுவர் சிறுமிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதலமைச்சரிடம் பேசியபொழுது துள்ளி குதித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  நரிக்குறவ இன மக்களிடம் அடுத்த ஒரு வாரத்திற்குள் தங்களை சந்திக்க வருவதாக உறுதி அளித்துள்ளார்.


முன்னதாக இதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவர் இன பெண் தன்னை , அன்னதானம் சாப்பிடுவதற்காக கோவில் உள்ளே அனுமதிக்கவில்லை என உருக்கமாக கண்ணீர் மல்கபேசிய வீடியோ வைரல் ஆனா நிலையில் அந்த பெண்ணை சந்தித்து அந்தப் பகுதி மக்களுக்கு உதவிகள் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண்ணிற்கு மட்டுமில்லாமல் அந்த பகுதியில் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வந்தார் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இந்த செயல் தற்போது பெயர் சமூகவலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.