சென்னையில் உள்ள நந்தனம் அரசு கல்லூரியானது இருபாலரும் பயிலும் வகையிலான கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


நந்தனம் அரசு கல்லூரி 


ஆண்களுக்கான அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வரும், நந்தனம் அரசு கல்லூரியானது, சென்னை , நந்தனத்தில் அமைந்துள்ளது.


இக்கல்லூரியானது 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றதாகும். இக்கல்லூரி கலை, வணிகம் மற்றும் அறிவியலில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.


இக்கல்லூரியில், இளநிலை பட்டப் படிப்புகளை ஆண்கள் மட்டுமே பயின்று வந்தாலும், முதுநிலை பட்ட படிப்புகளை இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இக்கல்லூரியில், இளநிலை பட்டப்படிப்பில்  இடைநிற்றல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், காலியிடங்களும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 


இருபாலர் கல்லூரியாக மாற்றம்:


இந்நிலையில், காலியிடங்கள் குறைபாட்டை போக்கும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் 2024-25 முதல், இளநிலை பட்ட படிப்பிலும் இருபாலருக்கான சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இக்கல்லூரியில், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் மாணவிகள் அதிகளவில் சேர்ந்து பயின்று வருவதால், இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 


இந்நிலையில், கல்லூரியின் சேர்க்கை குறித்தும், விரிவான பாடப்பிரிவு குறித்துமான கூடுதல் தகவல்களுக்கு , நந்தனம் அரசு கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை பார்க்கவும்.