11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களை அறிவது எப்போது, எப்படி என்று விவரமாக அறிந்துகொள்ளலாம்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நடத்த முடியாமல் போன பொதுத்தேர்வுகள், 2021-22ஆம் ஆண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தப்பட்டன. எனினும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டன. அதே வேளையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன.
11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வை சுமார் 8.83 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனிடையே 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்களைத் திருத்தி முடிக்கும் பணி ஜூன் 9ஆம் தேதி நிறைவடைந்தது.
தேர்ச்சி விகிதம் எப்படி இருந்தது?
இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். கடந்த கல்வியாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு 10ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்தது. 12ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது.
ஜூலை மாதத்தில் மறுதேர்வுகள்
தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மறுதேர்வு வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை (ஜூன் 27ஆம் தேதி) காலை 10 மணிக்கு, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?
மாணவர்கள் முதலில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு, தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.
http://tnresults.nic.in/
https://dge.tn.nic.in/
https://dge1.tn.nic.in/
https://dge2.tn.nic.in/
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்