மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சர் சிவராஜ் சவுகான் நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோயில் பகுதிக்கு வந்த மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சவுகானை தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு காவல் துறையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்தனர்.
" யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் "
பிறகு அவரக்கு சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றி குறிப்புகள் அடங்கிய சுற்றுலா தகவல் புத்தகம் வழங்கப்பட்டது. பின்னர் காவல் துறையினரையும், அதிகாரிகளையும் தன் அருகில் அழைத்த முதல்-அமைச்சர் சிவராஜ்சவுகான், சுற்றுலா வந்துள்ள பொதுமக்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், மக்களோடு மக்களாக நான் சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன் என்றார். எனக்கு பாதுகாப்பு கொடுக்கின்றேன் என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். பிறகு அவர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார்.
" வியந்து பார்த்த முதலமைச்சர்"
கடற்கரை கோயிலின் இரு கருவரைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். அப்போது உடன் வந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டத்தின் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார்.
"இன்முகத்துடன் செல்ஃபிக்கு போஸ்"
அவரிடம் முதல்வர் சிவராஜ் சவுகான் கடற்கரை கோயிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். இறுதியில் கடற்கரை கோயிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று தன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது சுற்றுலா வந்திருந்த மத்திய பிரதேச மாநில பயணிகள் சிலர் அவரது அருகில் செல்பி எடுக்க ஆர்வமாக சென்றனர். அவர்களின் விருப்பத்தை அறிந்த முதல்வர் அவர்களை தன் அருகில் அழைத்து செல்பி, புகைப்படம் எடுத்து தன் மாநில சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சிபடுத்தினார். தமிழ்நாட்டை சேர்ந்த சில சுற்றுலா பயணிகளும் அவர் யார் என்பதை தெரிந்துகொண்டு பிறகு, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மத்திய பிரதேச முதல்வர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்