இருள் விலகி ஒளி பிறக்க இந்த புத்தாண்டு வகை செய்யட்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் புத்தாண்டு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 




”புத்தாண்டில் துன்பங்கள் துடைத்தெறியப்

படட்டும்... மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்!” - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்..


மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன... ஆனால், அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கி, 2023-ஆம் ஆண்டு வரை கடந்த 4 ஆண்டுகளாக புத்தாண்டுடன் தவிர்க்க முடியாமல் இணைந்திருக்கும் விஷயம் கொரோனா தான். கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டையும், மக்களையும் மிரள வைத்த கொரோனா  இப்போது புதிய வடிவத்தில் உருமாறி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களைப் போலவே நடப்பாண்டிலும் கொரோனாவைக் கடந்து முன்னேற்றப் பாதையில் நாம் நடைபோட்டுத் தான் தீர வேண்டும்.

2023-ஆம் ஆண்டும் மலர்ப்பாதை விரித்து நம்மை வரவேற்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம் உருமாறிய  கொரோனாவும், இன்னொருபுறம் பொருளாதார மந்த நிலையும் நம்மை  கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் எத்தனையோ, நெருக்கடிகளை சந்தித்த நாம், இந்த நெருக்கடியிலிருந்தும் மீண்டு வருவோம்.

நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப் படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே  அளிக்கும்.

நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. இனி மலர்ப்பாதையில் தான் நாம் பயணிக்கப் போகிறோம். அதன் பயனாக 2023-ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.... அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 


மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி: 

இருள் விலகி ஒளி பிறக்க

புத்தாண்டு வகை செய்யட்டும்!

 

ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை  கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நெருக்கடி மற்றும் பின்னடைவுகளையே சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களில் தமிழகத்தின்  உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையை மாற்றி தமிழகத்திற்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யப்பட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்.