சென்னையின் புறநகர் என்றாலும் பளபளக்கும் சாலைகள், வான் உயர  கட்டிடங்கள் என மிரளவைக்கும் ஓ.எம்.ஆர் சாலைகள். அங்குதான் ஐடி நிறுவனங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதுபோக, குடியிருப்புக் கட்டிடங்கள் தீப்பெட்டிகளால் அடுக்கப்பட்டிருப்பதும் அங்கேதான்.  பெருங்குடி, நாவலூர், மேடவாக்கம், துரைப்பாக்கம் போன்ற பகுதிகள் வேகமாக வளர்ந்தும் வருகின்றன. அப்பகுதிகளில் தான் சுங்கச்சாவடிகள் உள்ளன. 


குறிப்பாக நாவலூர், பெருங்குடி,  மேடவாக்கம், துரைப்பாக்கம், அக்கறை உள்ளிட்ட  5 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. வெளியூரில் இருந்து சென்னைக்குள் வந்துபோகும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்துதான் வந்துபோகின்றன. இதனை மூடக்கோரி போராட்டங்கள் நடைபெறுவதும் உண்டு. கட்டணம் என்பதையும் தாண்டி அந்த சுங்கச்சாவடிகளால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வழக்கம். ஐடி நிறுவனங்கள் பல உள்ளதாலும் புறநகர் பகுதியில் இருந்து பலர் சென்னைக்குள் வருவதாலும் பீக் ஹவர் எனக்கூறப்படும் நேரங்களில் மிகக்கடுமையான நெரிசல் ஏற்படும்.




இந்நிலையில்தான் ஓஎம்ஆர் பகுதியில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் ஏவ வேலு அறிவித்தார்.  ஓஎம் ஆர் சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறவுள்ளதால் இந்த அறிவிப்பை அரசு அறிவித்தது. ஆனால் நாவலூர் நகர எல்லைக்குள் வராததின் காரணத்தினாலும், அங்கு மெட்ரோ வரவில்லை என்பதால் அந்த சுங்கச்சாவடி தொடர்ந்து செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் 4 சுங்கச்சாவடியும் இல்லாமல் வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக சுங்கச்சாவடி இல்லாததால் போக்குவரத்து நெரிசலும் இல்லை அதனால் நேரம் அதிகளவு மிச்சம் ஆவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக செல்லும் நேரத்தை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே செல்ல முடிவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.




சுங்கச்சாவடி குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேசிய சென்னை வாடகை கார் ஓட்டுநர்களின் சங்கத்தலைவர் ராமானுஜம், சுங்கச்சாவடி நீக்கப்பட்டது பெரிய உதவியாய் இருக்கிறது. குறிப்பாக ஓட்டுநர்களுக்கு மாதம் 2 ஆயிரம் வரை சுங்கக்கட்டணம் சேமிக்கப்படும். அதேபோல போக்குவரத்து நெரிசல் இல்லை என்பதால் பெட்ரோல், டீசல் சேமிப்பே மாதத்துக்கு ரூ.1500 வரை கிடைக்கும். அதேபோல் நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தையும் நீக்கினால் பெரும் உதவியாக இருக்கும். ஏனென்றால் ஐடி நிறுவனங்களின் சவாரியை பெற்றால் நிச்சயம் நாங்கள் நாவலூர் சுங்கச்சாவடியைத்தான் தாண்டிச்செல்ல வேண்டி இருக்கும் என்றார்.