சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சனையில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர்  சேகர்பாபு பேட்டி

 

இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத ஆன்மிகச் சுற்றுலா பேருந்தை சென்னை சேப்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

 

புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு சுற்றுலாவாக ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், மாமல்லபுரம் சயன பெருமாள் கோயில், சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். 2-வது திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமுல்லைவாயில், பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர் வீர ராகவபெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

 

இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது. புரட்டாசி மாத திருமால் சுற்றுலா செல்ல www.ttdonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். புரட்டாசி மாத திருமால் சுற்றுலா செல்ல பக்தர்களிடம் ₹900 வசூலிக்கப்படுகிறது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன்: தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாத சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். தற்போது சென்னையில் தொடங்கியுள்ளோம் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என பேசினார். இன்றைய புரட்டாசி மாத சுற்றுலா பயணத்தில் 55 பக்தர்கள் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும் இந்த திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் முன்பதி செய்து பயனம் மேற்கொள்ளலாம் என அமைச்சர்  மதிவேந்தன் தெரிவித்தார். 

 

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு: கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆடி மாதம் அம்மன் கோயில்களிலும், புரட்டாசி மாதங்களில் பெருமால் கோயில்களிலும் ஒரே நாள் சமி தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆடி மாதத்தில் 4 மண்டலத்தில் சுற்றுலா தரிசனம் மேற்கொள்ளப்பட்டது. 

 

தற்போது புரட்டாசி மாதம் சென்னையை சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் சுற்றுலா தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கீழ் செல்லும் பக்தர்கள் சிறப்பு தரிசனம், பிரசாதம் மற்றும் கோயில்களில் வரலாறு அடங்கிய புத்தகம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் வரவேற்பை பொறுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இதுபோன்று ஆன்மீக சுற்றுலா விரிவு படுத்தப்படும். 

 

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்களில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் எடுத்து வைத்து வருகிறோம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பிரச்னையில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டத்திற்கு புறம்பாக ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும். கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முழு சுதந்திரம் அளித்துள்ளார். அதன்படி கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.