புதிய வழித் தடத்தில் பேருந்து தொடக்கம்


சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகே தொடங்கி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வரை சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் முக்கிய வழித் தடங்கள் வழியாக செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்:


இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இந்த பகுதியில் இருந்து கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மனை வரை சிகிச்சைக்கு செல்வதற்கு ஏதுவாக சிற்றுந்து வசதி இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்கின்ற வகையில் கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை இப்பகுதி மக்கள் பலரும் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி S30 K என்ற சிற்றுந்து வசதி தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. 


எந்த வழியாக பேருந்து செல்லும் 


கோட்டூர் பறக்கும் ரயில் நிலையம் அருகில் இருந்து  கோட்டூர்புரம் , நந்தனம் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை , பஜார் சாலை ஆலந்தூர் சாலை போன்ற பகுதிகள் வழியே கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை இந்த பேருந்து சென்றடைய இருக்கிறது. சைதை தொகுதியில் இருக்கிற 50 சதவீதத்திற்கும் மேலான பொதுமக்கள் கலைஞர் மருத்துவமனையை சென்றடைவதற்கு இந்த பேருந்து ஏதுவாக இருக்கும்.


கடந்த கால ஆட்சியில் சைதாப்பேட்டை தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழித்தடங்கள் மீண்டும் இந்த ஆட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 


மேலும் சைதாப்பேட்டை தொகுதி மாந்தோப்பு பகுதியில் ஏற்கனவே மகளிர் உடற்பயிற்சி கூடம் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கக் கூடிய நிலையில் மீண்டும் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க வைக்கப்பட்டிருக்கிறது.


வைரஸ்களை தடுக்க வழி 


HMPV வைரஸ் மிக, மிக கட்டுக்குள் இருக்கிறது. பெரிய அளவில் பதட்டப்படவும் பயப்படவும் வேண்டாம். இது போன்ற வைரஸ்களை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி அவசியம். நல்ல உணவு பழக்கங்களை கொண்டு வருவது தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிப்பது பொதுவாக எல்லோருக்கும் நல்லது என்றார்.