சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி குஜராத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் சதுரங்க கரை வேட்டி மற்றும் சட்டையில் மோடி பங்கேற்றார்.
செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன், எம்பி.தயாநிதி மாறன், டிஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி மற்றும் பட்டு சட்டையில் பங்கேற்றார். துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சௌந்தர்யா, நடிகர் கார்த்தி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் முன்னதாக தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, “26.05.2022 பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு பல உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 2 மாதங்களில் ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 75 ஆண்டுகளில் நடக்காத சாதனையாக திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.
8 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி, பாரம்பரியம், தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சென்றதன் பெருமை பிரதமர் மோடியை சேரும்.
ஐநாவில் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பாரதிக்கு இருக்கை அமைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். நம்முடைய தலைவரை பெருமைப்படுத்திய தலைவர் நரேந்திர மோடி.
இந்தியாவில், தமிழ்நாட்டில் இந்த செஸ் விளையாட்டை நடத்த காரணம் பிரதமர் மோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தான். இருவரும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இன்று சென்னையில் இவ்வளவு பெரிய விழாவை நடத்துவது பெருமிதமாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து அனிதா, சரத் கமல், அர்ச்சனா, மாரியப்பன், தீபிகா பல்லிக்கல் ஆகியோரை பெருமைப்பபடுத்தி பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்த செஸ் போட்டி நடத்தும் தமிழ்நாடு அரசு முயற்சிக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.