விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

சென்னை  ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களும் சென்னை, இராணிப்பேட்டை, தஞ்சாவூர், தட்டப்பாறை (தூத்துக்குடி) என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றம் கலை நிகழ்ச்சிகள் அக்டோபர் 2024 மாதம் நடைபெற்றன..

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றம் கலை நிகழ்ச்சிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் , குண்டு எறிதல் உள்ளிட்ட தனிநபர் பிரிவு போட்டிகளும் கைப்பந்து, கபடி பூப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளும் தனித் தனியே சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு நடத்தப்பட்டன.

மேலும் பேச்சு, பாடல், ஓவியம் மற்றும் நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.. 

சென்னை மண்டல அளவிலான போட்டிகளில் 36 இல்லங்களிலிருந்து 764 குழந்தைகளும், இராணிப்பேட்டை மண்டல அளவிலான போட்டிகளில் 37 இல்லங்களிலிருந்து 927 குழந்தைகளும், தஞ்சாவூர் மண்டல அளவிலான போட்டிகளில் 57 இல்லங்களிலிருந்து 1022 குழந்தைகளும், தட்டப்பாறை (தூத்துக்குடி) மண்டல அளவிலான போட்டிகளில் 39 இல்லங்களிலிருந்து 736 குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

மண்டல அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்த 488 குழந்தைகள் இன்று மற்றும் நாளை நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்..

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழா மேடையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்

மாநில அளவிலான போட்டிகளில் கிட்டத்தட்ட 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர், முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து, இந்த துறையில் புத்துணர்ச்சி பாய்ச்சப்பட்டு இருக்கிறது, இந்த பிள்ளைகளின் நலனுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு படிப்பு மட்டுமே, கல்வியின் மூலம் தான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்ள முடியும் , உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ன கத்துக்க முடியுமோ கற்றுக் கொள்ளுங்கள், திறமையானவர்களாக உங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்

இந்தத் துறை தற்பொழுது புத்துணர்ச்சி பெற்றுள்ளது. 21 வயது வரை இந்த குழந்தைகளுக்கான கண்காணிப்பு மற்றும் வசதிகளை இந்த துறை செய்து வருகிறது. 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் அவர்களை வெளியே செல்ல வைப்பது கிடையாது. கல்லூரி படிக்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.

எல்லா அரசு இல்லங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருகிறோம், குறிப்பாக அனைவருக்கும் கட்டில்கள் போடப்பட்டுள்ளது. வளரும் குழந்தைகளுக்கு சாப்பாடு அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் சோம்பேறி தனமாக இருக்க கூடாது என்பதற்காக பல உதவிகள் செய்து வருகிறோம். தரமான‌ கல்வி, உணவு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்று ஆளுநரின் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர்...

ஆளுநர் தெரிந்தும் தெரியாமல் சொல்கிறார் பிற மாநிலத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சென்னை பெண்களுக்கான பாதுகாப்பான இடம், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்துள்ள பெண்கள் சென்னையில் படித்து வேலை செய்து வருகிறார்கள்.

பிற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் மறைக்கப்படுகிறது, ஆனால் தமிழ்நாட்டில் நடக்கக் கூடிய விஷயங்கள் வெளியே வருகிறது, தெரிந்தும் தெரியாமல் ஆளுநர் கூறலாம் என்று தெரிவித்தார்.