சென்னை விம்கோ நகரில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு:


விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் - பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விம்கோ நகர் பணிமனை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.  தற்போதைய சூழலில் விம்கோ நகர்  - டோல்கேட் மெட்ரோ  ரயில் நிலையங்கள் இடையே ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு பொதுமக்கள் தங்களது பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவையை நம்பியிருக்கும் வடசென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


என்ன பிரச்னை:


வடசென்னை பகுதியில் உள்ள விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பணிமனைக்கு செல்லும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,  விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே 6 நிறுத்தங்கள் உள்ளன. அந்த பாதைகளில் 18 நிமிட இடைவெளியில், ஒருவழிப்பாதையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது தொடர்கிறது. மின்விநியோக பிரச்னையை பூர்த்தி செய்வதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், பணிகள் முடிந்த உடன் உடனடியாக வழக்கம்போல் ரயில் சேவைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி முடிவடைந்ததை தொடர்ந்து, பல்வேறு தரப்பு மக்களும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்குள் வர பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் காலை 6 மணியிலிருந்து விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான  மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விம்கோ நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


முன்பதிவு வசதி:


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (491 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் கட்ட மெட்ரோ பணி:


ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் பயன்பாடு என்பது சென்னை மக்களிடையே குறைவாகவே இருந்தாலும், தற்போது அது இன்றியமையாத பொதுப்போக்குவரத்தாக மாறியுள்ளது. இதனால் தான் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.)3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.