மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், சோத்துபாக்கம் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், கேசவராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கோரியும், நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018-ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நான்கு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவாய்த்துறையினர், அளவடி செய்தனர். அளவில் செய்து நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழப்பமான ரிப்போர்ட்
இதுகுறித்து அப்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது என நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவ்வாறு குறிப்பிடப்பட்ட ஆய்வில், இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களின் குறித்த விவரங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து ராஜா என்பவர் மீண்டும் வழக்குத் தொடுத்து முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணை
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரம் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சார்பில் போடப்பட்ட மனுவில் நாங்கள் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி விடும் என தெரிவித்திருந்தனர். ஏன் இதுவரை இன்னும் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இனிமேல் காத்திருக்க முடியாது சரியாக ஒரே மாதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா என மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டது.
அதேபோல மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ABP NADU இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில்,செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்மருத்தூர் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்த நிலையில், நாளை மறுதினம் ( 08/06/22) அன்று மேலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி உள்ளது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம். புல எண் 13/2 அடிகளார் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியையும். புல எண் 59 இல், உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளும் அகற்றப்பட்டுதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி என்று தங்களுடைய உடைமைகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் சித்தம் ஒரு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.