சென்னை, கொளத்தூர், லட்சுமி நகர் 8ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் ( வயது 44) சென்னை, அண்ணா சாலையில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தன் மனைவி மகேஸ்வரி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.


தூக்கிட்டுத் தற்கொலை


இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை 3 மணிக்கு தனது வீட்டில் படுக்கை அறைக்கு சுதாகர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


தொடர்ந்து உடனடியாக இதுகுறித்து ராஜ மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், சுதாகரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


வீட்டுக் கடன், கந்துவட்டி தொல்லை


தொடர்ந்து இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சுதாகர் கந்து வட்டி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


சுதாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரிடம் வீடு ஒன்றை 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளார். சுதாகர் இந்த வீட்டுக்கு 20 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்த நிலையில், மீதமுள்ள 25 லட்சத்தை அவர் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து சுதாகரை தொடர்பு கொண்ட ராஜன், "வீட்டை நானே எடுத்துக் கொள்கிறேன். உனது பணத்தை வாங்கிக்கொள்," என்று கூறியுள்ளார். இதற்கு சுதாகர் மறுப்பு தெரிவித்ததோடு சில மாதங்களில் பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து சுதாகருக்கும் ராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில் ராஜனுக்கு கொடுப்பதற்காக சுதாகர் கொளத்தூர் வெற்றி நகரை சேர்ந்த மைதிலி (54) என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதற்காக தன் கையொப்பமிட்ட காசோலையை மைதிலியிடம் சுதாகர் கொடுத்துள்ளார்.


இதனிடையே மைதிலி தான் கொடுத்த பணத்தை அடிக்கடி கேட்டு சுதாகரை தொந்தரவு செய்துள்ளார். மேலும், சுதாகர் கொடுத்த செக்கை 10 லட்ச ரூபாயாக பூர்த்தி செய்து வங்கியில் செலுத்தி செக் பவுன்ஸ் செய்துள்ளார்.


அதன்பிறகு சுதாகரிடம், 10 லட்சம் தருமாறு கூறி தொந்தரவு செய்தும் வந்துள்ளார். இந்நிலையில், ராஜன், மைதிலி இருவரின் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுதாகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


மனைவி புகார்


இதுதொடர்பாக சுதாகரின் மனைவி மகேஸ்வரி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அவரது புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மைதிலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் சுதாகரின் வீடு சம்பந்தமான வழக்கு செங்குன்றம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கை செங்குன்றம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.