திருவண்ணாமலையில் இளைஞர் ஒருவர் அழைப்பிதழ் கார்டு வாங்குவதுபோல் நடித்து கடை உரிமையாளரிடம் இருந்து பட்டபகலில் கத்தியை காட்டி 10 பவுன் தாலிச் சரடை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை வீதி என்பது முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. தினமும் காலை முதல் இரவு வரை இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சின்னக்கடை வீதியில் திருவண்ணாமலை வேங்கி கால் ஊராட்சி குபேர நகரை சேர்ந்த சந்திரசேகர் வயது (47) என்பவரது மனைவி கவிதா என்பவர் நோட்டு புத்தகம் மற்றும் திருமண அழைப்பிதழ் கார்டு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணி அளவில் அவசர வேலைக்காரணமாக சந்திரசேகர் வெளியே சென்றுள்ளார்.
அப்போது கடையில் அவருடைய மனைவி கவிதா மட்டும் இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 'ஹெல்மெட்டை' கழற்றி மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு, அந்த கடையில் சென்று கையில் வைத்து இருந்த திருமண அழைப்பிதழ் கார்டை காண்பிடித்து இதுபோன்று வேண்டும் என்று கூறி கேட்டுள்ளார். அதன் பிறகு கார்டு எடுப்பதற்காக கவிதா கடைக்குள்ளே சென்ற போது அந்த இளைஞர் திடீரென கடைக்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா தாலிச்சரடை ஒரு கையில் இருக்கி பிடித்துக்கொண்டார். பின்னர் அந்த இளைஞர் கவிதாவின் கையை கடித்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கவிதாவை மிரட்டி தாலிச்சரடை பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா திருடன்...திருடன்... என கூச்சலிட்டுக்கொண்டே வெளியே ஓடிவந்தார். அதன் பிறகு சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகை பறிப்பு நடைபெற்ற கடையை பார்வையிட்டு அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அதுவும் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருவண்ணாமலையில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்