சென்னை, தாம்பரம் அடுத்த திருநீர்மலை சாலையில் பெண்கள் விடுதி அமைந்துள்ளது.  இந்த விடுதியில் அந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில பெண்கள் தங்கி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற பெண்ணும் இந்த விடுதியில் தங்கி வந்தார்.


நேற்று காலை குமாரி தனது செல்போனில் பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக் கொண்டு நண்பர்களிடம் போன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் விடுதி அருகே உயர்மின் அழுத்த கம்பி செல்கிறது. குமாரி துவைத்து காயப்போட்டிருந்த துணிகள் உயர்மின் அழுத்த கம்பி செல்லும் பகுதி அருகே விழுந்துவிட்டது.




இதனால், துணியை எடுக்க குமாரி முயற்சித்துள்ளார். அதற்காக, அந்த பகுதிக்கு செல்லும் வழியில் இருந்த கிரில் கேட் ஒன்றின் மீது ஏறி துணியை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போதும், குமாரி தன்னுடைய செல்போனை பவர்பேங்கில் சார்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது, உயர்அழுத்த மின்சார கம்பியில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் கதிர்வீச்சு காரணமாக செல்போனில் பாய்ந்தது. இதனால், குமாரி மீது மின்சாரம் பாய்ந்ததுடன் செல்போனும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் குமாரி சம்பவ இடத்திலே உடல் கருகி துடிதுடித்து வலியில் அலறினார்.




மேலும், குமாரி மீது பாய்ந்த மின்சாரம் அந்தை கட்டிடம் முழுவதும் பாய்ந்தது. அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூனம்(20 வயது) ஊர்மிளா குமாரி (வயது 24) ஆகிய இருவருக்கும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, தகவலறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். மின்சாரம் தாக்கி இவர்கள் மூன்று பேரும் படுகாயமடைந்து வலியில் துடிதுடிப்பதை கண்டவர்கள் காயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கும்கும் குமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வடமாநில பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் பேசும்போது சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது பேராபத்து என்று பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் லட்சக்கணக்கில் தங்கம் பறிமுதல்... வசமாக சிக்கிய 3 பெண்கள்..!


மேலும் படிக்க: Chennai Traffic: சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. புதிய வழிகள் இவைதான்..!