2009ல் ரூ.1468 கோடியில் தொடங்கிய மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், 2022ல் ஒப்பந்தமாகியிருக்கிறது. என்ன நடந்தது இந்த இடைப்பட்ட காலத்தில்? அத்திட்டம் கடந்து வந்த பாதை குறித்த விரிவான தொகுப்பு இதோ...
மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் கண்டெய்னர் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு செல்ல வேண்டிய கண்டெய்னர்கள் மணி கணக்கில் காத்திருப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்புக்கு முடிவு கட்டவும் கண்டெய்னர் லாரிகளை மதுரவாயல் அவுட்டர் ரிங் ரோடு வழியாக வரவழைத்து, மதுரவாயல் முதல் சென்னை துறைமுகத்தின் 10ஆம் எண் நுழைவுவாயில் வரை பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அன்றைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முன்னெடுத்தது.
மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு கூவம் நதிக்கரையோரம் தூண்களை அமைத்து பறக்கும் சாலையை அமைக்கும் இத்திட்டத்திற்கு 1,468 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் 2011ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு 1,815 கோடியாக உயர்த்தப்பட்டது
ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு கூவம் நதிக்கரையோரம் தூண்கள் அமைக்கப்பட்டு கட்டுமானங்கள் நடந்த நிலையில் 2011ஆம் ஆண்டு புதிதாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சுற்றுசூழல் காரணங்களை காட்டி 2012ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு தடை விதித்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கூவம் ஆற்றின் கரைகளில் தூண்கள் அமைக்கப்படுவதால், வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதே நீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்து வைத்த முக்கிய வாதங்களாக இருந்தது.
2015ஆம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போதும் கூவம் நதிக்கரையில் பறக்கும் சாலைக்காக அமைக்கப்பட்ட தூண்களில் எந்த பாதிப்பும் ஏற்படாததை சுட்டிக்காட்டி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அன்றைய திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையையும் விடுத்திருந்தார்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முனைப்பு காட்டியது, அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் தர முன்வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டம் 2,400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
2018ஆம் ஆண்டு மே மாதத்தில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான தடையில்லா சான்றையும் தமிழக அரசு அளித்திருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இத்திட்டத்தில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தார் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. 4 வழிப்பாதையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த பறக்கும் சாலை திட்டம் 6 வழிப்பாதையாக மாற்றப்பட்டு ஈரடுக்கு பாலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இதற்கான திட்டமதிப்பீடாக 5,000 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
பறக்கும் சாலை திட்டத்தை ஈரடுக்கு பாலமாக மாற்றுவதை கண்டித்தும் எந்த மாற்றமும் செய்யாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்ததுடன், திமுக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. கடந்த 11 ஆண்டுகாலமாக பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உயர்ந்துள்ளதாலும் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய கண்டெய்னர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதால் ஏற்படுள்ள பொருளாதார இழப்பை முடிவுக்கு கொண்டுவரவும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆளுநர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1,468 கோடி திட்ட மதிப்புடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு இறுதியாக 2020ல் 5,000 கோடி வரை நிதி ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. அதன் பின் திமுக அரசு பொறுப்பேற்ற பின், அந்த பணிகள் தொடங்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில், ஒருவழியாக 2022 மே 16 ம் தேதியான இன்று, 5888 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்பது முடிவு செய்யப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
வரும் மே 26 ம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டி, முறைப்படி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 2009ல் தொடங்கி, 2022 வரை பயணித்த இத்திட்டம், 13 ஆண்டுகள் கழித்து இப்போது தான் செயல்வடிவம் பெற்றுள்ளது.