சென்னை சவுக்கார் பேட்டை நகை கடை பஜார் தான் எங்க HUB, நகை வாங்குபவர்களை நோட்டமிட்டு பல நாட்களாக பின்தொடர்ந்து அவர்களை கடத்தியாக போலீசார் விசாரணையில் அவர்கள் கூறியது தெரியவந்துள்ளது.

 

நகை வியாபாரியை பாலோ செய்த குமபல்

 

ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (60). இவர் தங்க நகையை வாங்கி விற்பனை செய்தும், கைமாற்றி விடுவதுமான தொழில் செய்து வருகிறார். மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நகை கடைகளில் நகையாகவோ அல்லது தங்க கட்டிகளாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

 

கடந்த 23ஆம் தேதி சென்னையில் 2 கிலோ தங்கத்தை சுப்பிரமணியன் வாங்கிவிட்டு அன்று இரவே மதுரை செல்லும் பாண்டியன் எஸ்பிரஸ் ரயிலில் அடுத்த நாள் அதிகாலை மதுரை வந்த வந்துள்ளார். அப்போது, அவரை கத்தியை காட்டி 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஆட்கள் இல்லாத இடத்தில் வைத்து 2.054 கிலோ தங்க நகை மற்றும் பாலசுப்ரமணியனின் செல்போன், 3500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவரை காரில் இருந்து இறக்கி விட்டு தப்பி ஓடியது. மேலும், பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியன் உடனடியாக அருகில் உள்ள ஊருக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

போலீசார் விசாரணை

 

தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது சம்பவம் நடந்த இடம் மதுரை ரயில்வே நிலையம் என்பதால் மதுரை திலகர்திடல் காவல் நிலையத்திற்கு பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ரயில் நிலையம் மற்றும் காரில் கடத்தப்பட்ட இடம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை கைப்பற்றி 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

 

மேலும், பாலசுப்பிரமணியன் வாக்குமூலத்தை வைத்து காரில் கடத்தப்படும் போது 5 பேர் இருந்ததாக தெரிவித்ததன் பேரில், 5 பேர் கொண்ட கும்பல் என்பதும், CCTV காட்சிகளின் அடிப்படையிலும், கார் பதிவெண் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலசுப்பிரமணியன் சென்னை சவுக்கார் பேட்டையில் அடிக்கடி நகை வாங்கி வந்ததும், அவரை போன்ற மற்றொரு நகை புரோக்கர் நாகேந்திரன் (சூர்யா) மூளையாக இருந்து அவரது தூண்டுதலின் பெயரில் மற்றவர்கள் செயல்பட்டது தெரியவந்தது.

 

போலீசார் தேடி வருகின்றனர்

 

தொடர்ந்து, தனிப்படை போலீசார் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் மேலூர் அருகே சரிகுவலையப்பட்டியை சேர்ந்த பாக்கிராஜ் (39), திருநெல்வேலியை மாவட்டம் நாங்குநேரி அருகே மேல காடுவெட்டி பகுதியை சேர்ந்த முத்து மணிகண்டன் (26), மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் (41) என்பது தெரியவந்தது.

 

3 பேரையும் முதற்கட்டமாக கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் சென்னையிலிருந்து பாலசுப்பிரமணியன் அடிக்கடி மதுரைக்கு தங்க நகைகளை கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதும், இதனை அறிந்த நாகேந்திரன் (சூர்யா) தங்களை தூண்டியதாகவும் அதன் பேரில் கடத்தலில் ஈடுபட்டதாக பிடிபட்ட மூவரும் தெரிவித்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த நகை விற்பனை வியாபாரியின் கடத்தலில் மூளையாக செயல்பட்ட சென்னை சேர்ந்த நகை புரோக்கர் நாகேந்திரன்  (சூர்யா) மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் தலைமறைவாகிய நிலையில் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

 

கடத்தல் கும்பல் சிக்கியது

 

இந்த நிலையில், சென்னையில் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசாரை அனுப்பிவைத்து 2 நாட்களாக தேடி வந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் வைத்து செல்ல பாண்டியையும், சென்னை அருகே உள்ள பம்மலில் வைத்து நாகேந்திரன் (சூர்யாவையும்) நேற்று மாலை கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் இருந்து 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 800 மதிப்புள்ள 2.056 கிலோ தங்கம், 9 செல்போன், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.