கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு இயக்குனரகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில்  மலேசியாவை சேர்ந்த அங்கேஸ்வரன் மற்றும் அவரது மனைவி நந்தினியிடமிருந்து 4.58 கோடி ரூபாய் மதிப்பிலான 4.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், முடக்கப்பட்ட  பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை கோவை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 



 

இந்த உத்தரவை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் குற்றவியல் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்கு ஜாமின் வழங்கப்பட்ட போது நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாத நிலையில், பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு  விசாரணைக்கு வந்த போது ஆஜரான வருவாய் நுண்ணறிவு இயக்குனர் தரப்பு வழக்கறிஞர், பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தால் அவர்கள் மலேசியாவிற்கு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதால் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கூடாது என வாதிட்டார். 

 



மற்றொரு வழக்கு

 

அரியலூரில் உள்ள இந்து மத கோவில்களுக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயம் மற்றும் கல்லறை ஆகியவற்றை அகற்றக் கோரிய வழக்கில் இந்து சமய அற நிலையத்துறை, தேவாலய நிர்வாகம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் உள்ள சாலக்கரை கிராமத்தை சேர்ந்த இரட்டை பிள்ளையார் கோவிலின் தர்மகர்த்தாவான சுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் தங்கள் கிராமத்தில், சமீபகாலமாக சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவரும் நிலையில், வேறு கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்துவர்களால், சாலக்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் மற்றும் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான 90க்கும் மேற்பட்ட ஏக்கர், இலுப்பை தோப்பில் உள்ள மூன்றரை ஏக்கர், இரட்டை பிள்ளையார் கோவிலின் குளத்தை ஒட்டிய மூன்றரை ஏக்கர் ஆகியவற்றை ஆக்கிரமித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

அவ்வாறு ஆக்கிரமித்தவர்களால் சின்னப்பர் தேவாலயம் கட்டப்பட்டு உள்ளதாகவும், கல்லறை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை சுற்றி வேலி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சாலக்கரை ஊர் பொதுமக்களின் கோரிக்கையின்படி, அவற்றை  அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்டோரிடம் கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். தங்கள் கோவில் வழிப்பாடுகளில் தலையிடுவதாகவும், கோவில் திருவிழாக்களை தடுக்கும் வகையிலும் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தேவாலய நிர்வாகம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்கள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இதனையடுத்து, பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரிய இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, அவர்கள் மீதான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கோவை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.