தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்ததால், பிறப்பிடச் சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் மருத்துவரை, மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிக்கும்படி மத்திய மருத்துவ சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஹேமா, மருர்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் கோரி விண்ணப்பித்தார்.

 

ஆனால், தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூரைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் வழங்க மறுத்து புதுச்சேரி தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் ஹேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நாட்டில் 90 சதவீதத்தினருக்கு, பிறந்தது ஓரிடமாகவும், பணியாற்றுவது வேறிடமாகவும் இருப்பதாகவும், தனது கணவர் திருக்கோவிலூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரி தான் தனது பிறப்பிடம் எனவும் அது மாறாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தனக்கு சான்றுகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிடவும் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார்,  மருத்துவ மேற்படிப்பில் மனுதாரருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கவும், அவரை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்குவது தொடர்பாக எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.


 


















மற்றொரு வழக்கு

 

காசோலை மோசடி வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மருமகனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரவீந்திரன் இவர் சுமங்கலி என்ற நகைக்கடையை சென்னையில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்தார். பின்னர் அதனை மூடி விட்டு வேறு தொழில்கள் செய்து வந்தார்.

 

இந்நிலையில் ரவீந்திரனிடம்  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.எல் லட்சுமணனின் மருமகன் ஏ.எல் குமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக ஆறு காசோலைகள் மற்றும் ஆறு கடன் உத்தரவாத பத்திரம் (Promissory Notes) வழங்கி உள்ளார்.  பின்னர் அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலைகள் அனைத்தும் திரும்பி வந்தது.

 

ஏ.எல். குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை ரவீந்திரன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மூன்றாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

அதில் கடனுக்காக அவர் கொடுத்த காசோலை பணம் இல்லாமல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பி உள்ளதாகவும், வேண்டும் என்றே ஏமாற்ற வேண்டும் என்ற உள் நோக்கில் செயல்பட்டுள்ளார். எனவே எனது தொகையை திரும்ப தர உத்தரவிட வேண்டும் மோசடிக்கு என உரிய தண்டனை விதிக்க வேண்டும் என கூறியிருந்தது.

 

 இந்த வழக்கு சைதாப்பேட்டையில் உள்ள பெரு நகர குற்றவியல் மற்றும் முன்றாவது விரைவு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன்னாடியில் விசாரணை வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, காசோலை மோசடி வழக்கில் ஏ எல் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் எனவே அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் இருப்பதாகவும் இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கடன் தொகை ஒரு கோடி 20 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

பின்னர் தண்டனை எதிர்த்து குமார் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து மனு தாக்கல் செய்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.