நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக  வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான  விடைத்தாள்கள் கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியிடபட்டது.  அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்,  பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலில்  65 மதிப்பெண் பெற்றுள்ளதாக  குறிப்பிட்டுள்ளதால், தனது விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வந்தால் விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை, 10 நாட்களில் நிர்ணயித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார். அந்த தேதியில் நொய்டா வரும் மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

 



மற்றொரு வழக்கு





 

கும்பகோணம் அருகில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதாக  பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019 பிப்ரவரி 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

 

இதுதொடர்பாக முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன்  உள்பட 18 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், 13 பேரை கைது செய்தனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

 

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதீன் உள்ளிட்ட10 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையை துவங்காமலும், விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தாமலும் தாமதித்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

 

சாட்சிகள் விசாரணை முடிந்தால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை கீழமை நீதிமன்றம் புறக்கணித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதேநிலை நீடித்தால் வழக்கில் சாட்சி விசாரணை முடிய மேலும் 10 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தனர்.

 

தாமதமில்லாமல் பாதுக்காக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையையும், மற்ற சாட்சிகளின் குறுக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு  உத்தரவிட்ட நீதிபதிகள், முதலில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க வற்புத்த மாட்டோம் என கூறிய குற்றம்சாட்டப்பட்ட தரப்பு, தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்ற காரணத்தையே கூறி, ஜாமீன் கேட்க முடியாது என கூறி, 10 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.