சிவசங்கர் பாபா 


சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர்.


 




இதையடுத்து அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் இதுவரை 2 வழக்குகளுக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா மீது இதுவரை 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஜாமின் 


இதனையடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜாமீன் வழங்க வேண்டுமென சிவசங்கர் பாபா தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சுமார் 8 மாதங்கள் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவிற்கு, ஜாமீன் வழங்கப்பட்டு தற்பொழுது வெளியில் இருக்கிறார்.


 





வழக்கை ரத்து செய்ய


இந்தநிலையில், பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் மாணவி மின்னஞ்சல் மூலமாக அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது.


காணொலி வாயிலாக ஆஜர்


இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் தொல்லை அளித்தாக சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த முன்னாள் மாணவியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்துவைத்தார் .