அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

 

இந்நிலையில்,  சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.  மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

 

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது குறித்து அமலாக்கதுறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்கதுறை சார்பாக வாதிடப்பட்டது. 

 

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், அமலாக்கப் பிரிவு பதில் மனுவுக்கு பதிலளிக்க அனிதா ராதா கிருஷ்ணன் தரப்பு அவகாசம் கோரப்பட்டதையெடுத்து, வழக்கின் விசாரணைக்கு விதித்த தடையை ஜூலை 28 வரை நீட்டித்து வழக்கை தள்ளிவைத்தனர்.