மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் சிபிஎஸ்இ வாரியம் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


''ஏற்கெனவே அறிவித்ததுபோல ஜூலை 18ஆம் தேதி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும். பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது ஆண்டு வகுப்புகளும் தொடங்கி நடைபெறும்.


எனினும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் முதலாம் ஆண்டு சேர்க்கை மட்டும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தொடங்கும். தமிழக மாணவர்கள் இதில் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. சிபிஎஸ்இ வாரியம் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். தமிழக ஆளுநர் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும். 




இந்தி மொழிக்குதான் அதிக முக்கியத்துவம்


மாநில அரசின் முடிவுகளை செயல்படுத்துவதுதான் ஆளுநரின் பணி. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாய்மொழியான தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ஆனால் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கைக்கு, குறிப்பாக இந்தி மொழிக்கே அதிகம் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.


அவர்கள் தமிழ் மொழியை வளர்த்து வருகிறோம் என்று சொல்வது தவறான போக்கு. நான் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றும்போது தமிழ் வழிப் படிப்பே கிடையாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறு படிப்பவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.


இந்த வழியில் அரசு போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ் மொழித் தேர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இதைத்தான் திராவிட மாதிரி என்கிறோம். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது திராவிட  நாகரிகம்''.


இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 


இதையும் வாசிக்கலாம்: கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண