விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை பணி மந்த கதியில் நடைபெற்று வருவதாக மனுவில் கூறியுள்ளார். குறிப்பாக விக்கிரவாண்டி- பின்னலூர் இடையிலான பணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் மாற்றுப்பாதையில் செல்வதால் நேரம் மற்றும் பணம் விரயமாவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டுமெனவும், இந்த பணிகள் முடிவடையும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி T.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கில் 22 பேர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி இன்று அறிவித்தார். அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன், அனிதா, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, ராஜாசுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாயும் குற்றவாளிகள் சார்பாக 7 லட்சத்து ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.