`சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாயை சாக்கடையாக மாற விட்டுவிடாதீர். சென்னையின் நீர்நிலைகள் நகரத்தின் நுரையீரலைப் போன்றவை. அவை வெறும் வரலாறாக மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும்’ எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை நகரத்திற்கு உட்பட்ட நீர்நிலைகள், ஏரிகள், ஆற்று வழிப்பாதைகள், காடுகள் முதலானவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. ஒரு பொதுநல மனுவில் சென்னையின் நீர்நிலைகள் குப்பைகளைக் கொட்டுவதற்காகவும், எரியூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் விவரங்கள் வருவாய்த்துறை ஆவணங்களிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜ், நீதிபதி பி.டி. ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு குப்பை கொட்டும் இடத்தை மாற்றம் செய்யுமாறும், நீர்நிலைப் பகுதியில் எரியூட்டும் நிலையம் எப்படி உருவாக்கப்பட்டது என விளக்குமாறும் ஏற்கனவே கூறியிருந்தது.
இந்த நீதிமன்ற அமர்வில் 2015ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த பெருவெள்ளம் குறித்தும் கூறப்பட்டது. நகரத்தில் மழைநீர் வடிவதற்கான இடமோ, வசதிகளோ இல்லாததால், சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதாகவும், எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அசம்பாவிதங்களுக்கான எச்சரிக்கையாக சென்னைப் பெருவெள்ளம் இருப்பதாகவும் இந்த அமர்வு தெரிவித்துள்ளது.
`அரசு அதிகாரிகளின் பணியைச் சுட்டிக்காட்டுவதோ, உத்தரவிடுவதோ நீதிமன்றத்தின் பணியல்ல. ஆனால் கூவம் ஆற்றின் தற்போதைய நிலை குறித்தும், பக்கிங்ஹாம் கால்வாய் இன்று எப்படி இருக்கிறது என்பது குறித்தும் வரும் புகார்கள் காரணமாக, மாநில அரசுத் தரப்பிடம் இருந்து ஏதேனும் முயற்சிகள் செய்யப்பட வேண்டும். வளர்ச்சி என்பது நிலையானதாக இருக்க வேண்டும். இந்தப் பெருந்தொற்று மூலமாக, இயற்கைக்கு எதிராக செயல்படும் அளவுக்கு மனிதன் புத்திசாலி அல்ல என்பது தெரிய வந்துள்ளது. அதனால் மனிதன் இயற்கையுடனும், விலங்குகளுடனும் இணைந்து வாழ வேண்டும்’ என்று கடந்த வாரம் இந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று செப்டம்பர் 14 அன்று, மீண்டும் வழக்கு விசாரணைக்குக் கூடிய நீதிமன்ற அமர்வில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி `சென்னையில் எவ்வளவு நீர்நிலைகள் இருந்தன என்று தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பிவிட்டு, `சுமார் 1000 நீர்நிலைகள் சென்னைக்குள் இருந்தன’ என்று கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து, சென்னை நீர்நிலைகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, `பிற நீர்நிலைகளை விட பக்கிங்ஹாம் கால்வாய் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறது. அதனைச் சுத்தப்படுத்தி, சரியாகப் பராமரித்திருந்தால், இந்தியாவின் வெனிஸ் நகரமாக அது மாறியிருக்கும். அது சென்னையின் நுரையீரலைப் போன்றது. இயற்கையான முறைகளால் அதனைப் பராமரிக்க வேண்டும். கான்க்ரீட் கொண்டு பராமரித்தால், இன்னும் சிக்கல்கள் நேரும். பக்கிங்ஹாம் கால்வாய் குறித்து வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். நீங்கள் செய்வதைப் பார்த்தால், அது வரலாறாகவே மாறிவிடும் போல இருக்கிறது. என்னைப் பொருத்தவரை அது தற்போது சாக்கடையைப் போல தோற்றம் கொண்டிருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.