சென்னை என்றவுடன் மெரீனா தொடங்கி, அதிகார மையம் என்பது வரை நூற்றுக்கணக்கான நிஜங்கள் நம் கண்முன் வந்துச் செல்லும். ஆனால், கடற்கரை போன்ற இயற்கை இல்லாத, உண்மையிலேயே சென்னையின் கதாநாயகன் என்றால், கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகளாக நம்முன் கம்பீரமாக வீற்றிருக்கும் சென்னை கோட்டைதான். 


சென்னை கோட்டை என்றால் பலருக்குத் தெரியாது. ஏனெனில், இதன் பெயர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640-ம் ஆண்டு புனிதரான ஜார்ஜ் பிறந்த தினமான ஏப்ரல் 23-ம் தேதி, இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டதால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை என ஆங்கிலேயர்களால் பெயரிடப்பட்டது. கடற்கரைக்கு அருகே, பரந்து விரிந்த 107 ஏக்கர் நிலப்பரப்பில் இருப்பதுதான் இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை.




தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோட்டைகள் இருந்தாலும், வேலூர் கோட்டை, செஞ்சி கோட்டை, பாளையங்கோட்டை, தரங்கம்பாடி கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை என சில கோட்டைகள் மட்டுமே அடிக்கடி கேட்டு பரிச்சயம் அடைந்தவை. அந்த வகையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இன்றளவும் மக்கள் மனதில் மிகவும் பதிந்தவை. ஏனெனில், அந்த இடம் தமிழகத்தை ஆளுவோரின் அதிகாரப் பீடமாக இருப்பதும் காரணம். 


தமிழகத்தை வழிநடத்துவோரின் அரசவையாக இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை, கடந்த 1639-ம் ஆண்டு, ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய  கம்பெனி வாங்கி, கோட்டையை கட்டி திறப்பு விழாவும் நடத்துகிறது. இந்தியாவிலேயே ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை இந்தக்கோட்டைதான்.  அதன்பின் இந்தக் கோட்டையை வைத்து, சிறிது சிறிதாக மெட்ராஸ் விரிவுபடுகிறது. ஆங்காங்கே சிற்சில கிராமங்கள் இருந்த பகுதிகள் ஒன்றிணைய ஆரம்பிக்கின்றன. குறிப்பாக,ஆங்கிலேயர்களின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை மையமாக கொண்டு, மெட்ராஸ் தனது எல்லைகளை அதிகப்படுத்துகிறது. 




வியாபாரத்திற்கு வந்தவர்கள், கொஞ்சம், கொஞ்சமாக இந்தியாவுக்கே வேட்டு வைக்க ஆரம்பிக்கின்றனர். வேறுபாடுகளைப் பெரிதுப்படுத்தி, அடிமைப்படுத்த தொடங்குகிறது ஆங்கிலேய அதிகார வர்க்கம். மெட்ராஸிலிருந்து டெல்லி வரை அன்றைக்கே, இன்றைய பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், ரூட்டு போட்ட இடம்தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1753-ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் தமது திருமணம் முடிந்தவுடன், ஆங்காங்க தனித்தனியாக ஆளுகின்றவர்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயே சாம்ராஜ்யத்தை இந்தியாவில் உருவாக்க ரூட்டு போட்டதும் இன்று கம்பீரமாக வீற்றிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான்.


தற்போது 383 வயதாகும் சென்னை மாநகரம், இதுவரை அன்னியர்களின் பல போர்கள், பல புயல்கள், சுனாமி, நிலநடுக்கம்,எம்டன் கப்பல் போட்ட குண்டு என இயற்கையான, செயற்கையான பல பேரிடர்களைச் சந்தித்தாலும், இன்றும் அசைந்துக் கொடுக்காமல்,சென்னையில் சத்தமில்லாமல்,பல இடங்கள்  சிம்மாசனம் போட்டு கம்பீரமாக நிற்கின்றன. இதில் தவிர்க்க முடியாத சக்தியாக, அதிகாரத்தின் உச்சத்தில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நிற்பது செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான். 


இன்றைய கணக்கில் சுமார் 2500 கோடி ரூபாயாக இருக்கலாம்.. அதாவது அன்றைய கணக்கில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிற்கு ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்ட இடத்தில்தான், புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அகழிகள், நீண்டு உயர்ந்து சுற்றுச் சுவர்கள், பீரங்கிகள் வைப்பதற்கான இடங்கள், படைகள் மறைந்து நின்று தாக்குவதற்கு இடங்கள் என அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் காலக்கட்டத்திற்கு ஏற்ப உருவாகியதுதான் தற்போது நிற்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 




இப்பொதெல்லாம் கட்டப்பட்ட  சில ஆண்டுகளில் இடிந்துவிழும் கட்டடங்கள் இருக்கும் இந்தக் காலத்தைப் போல் இல்லாமல், 383 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பெரிய சிதிலங்கள் இல்லாமல், அனைத்தையும் தாங்கிக்கொண்டு, எப்போதும் போல் அமைதியாக நின்றுக் கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. இந்த சென்னை கோட்டையில் உள்ள பல இடங்களில் முக்கியமானது அமைதியும் கம்பீரமும் ஒரு சேர இருக்கும் புனித மேரி ஆலயம். இங்குதான், ஆங்கிலேய ஆட்சி அமைய முக்கிய காரணமான ராபர்ட் கிளைவ்-வின் திருமணம் நடைபெற்றுள்ளது. அவன் வசித்த கிளைவ் மாளிகை, அரசாட்சி செய்வதற்கான கட்டிடங்கள், அரசு அலுவலர்கள் தங்குவதற்கான இடங்கள் என அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கின்றன.


கோட்டையின் முன்பக்கத்தில் உள்ள கொடிமரம் மிக முக்கியமானது. ஆங்கிலேய ஆட்சி வீழ்ந்து, இந்தியாவின் சுதந்திரக் கொடி டெல்லியில் பறக்கவிடப்பட்ட அதே நேரத்தில், சென்னை கோட்டையிலும் இந்திய மூவர்ண தேசிய கொடி பட்டொளி வீசப்பறந்திருக்கிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பறக்கவிடப்பட்ட அந்த தேசிய கொடி, இன்றும் சென்னை கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


அதுமட்டுமல்ல, சென்னை கோட்டையில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளும் நூற்றாண்டுகளைக் கடந்து, அன்று இருந்த கள நிலவரத்தை நம் கண்முன் கொண்டு வரும். அந்தக்கால ஆயுதங்கள்,  பழக்கவழக்கங்களைக் கணிக்க உதவும் பொருட்கள், கலைப் பொருட்கள், அந்தக்கால ஓவியங்கள், ஆங்கிலேய கவர்னர்கள் பயன்படுத்திய இங்கிலாந்து பொருட்கள், நாணயங்கள்,பண்ட மாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்டவை என பல பொக்கிஷங்கள் வரலாறு பேசிக் கொண்டு இருக்கின்றன.




இது வரலாற்று ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய அருங்காட்சியகம். இப்படியொரு மியூசியம் உள்ளே இருக்கிறது, அதை அனைவரும் பார்க்க முடியும் என்பதே பலருக்குத் தெரியாது என்பதுதான் காலத்தின் கொடுமை. இனி மேலாவது, நேரம் கிடைக்கும் போது, அந்த கோட்டை மியூசியத்தை சென்று பார்த்துவிடுங்கள்.


இந்த கம்பீரமான சென்னை கோட்டையில்தான், இன்றைய அரசாங்கத்தின் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. முதல்வரின் அறை, அமைச்சர்களின் அறைகள், அரசு அதிகாரிகள், அலுவலர்களின் அறைகள், அலுவலகங்கள், சட்டமன்றம் என அனைத்தும் அடங்கி இருக்கிறது. இந்தக் கோட்டைக்கு உள்ளேயே, நாமக்கல் கவிஞர் மாளிகை எனும் பல மாடிக் கட்டிடமும் உள்ளது. அதுமட்டுமல்ல, ராணுவதத்தினரின் தங்குமிடங்களும் அலுவலகமும் ஒரு பக்கம் உள்ளது. தற்போது இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான இந்தக் கோட்டையின் பல பகுதிகள் இந்திய தொல்பொருள் ஆராய்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, இந்தக் கோட்டையில் உள்ள தமிழக அரசின் அலுவலகங்கள், சட்டமன்றம் ஆகியவை கூட வாடகைக்குத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இன்றும்,4 நூறாண்டுகளின் கதையை சொல்லும் இந்த புனித ஜார்ஜ் கோட்டை, ஒரு வரலாறு நூலகம்தான். அதுமட்டுமல்ல,  காலங்களைக் கடந்து வீற்றிருக்கும் இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான், சென்னையின் முதல் ஹீரோ மட்டுமல்ல நிரந்தர ஹீரோவும் என்றால் மிகையில்லை.