இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை ஆகும். ஆண்டுதோறும் சென்னை தினம் தமிழக மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னையின் 383வது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.


இதையடுத்து, புகழ்பெற்ற சென்னை மாநிலத்தின் நிர்வாக தலைநகராக மட்டுமின்றி, திரைப்பட தலைநகராக மட்டுமின்றி பல்வேறு வர்த்தக ரீதியிலான செயல்பாடுகளுக்கும் தலைநகராக விளங்குகிறது. மாநிலத்தின் பல்வேறு சிறப்பு மிகுந்த சுற்றுலா தளங்களுக்கு இணையான பல பெருமைகளை சென்னையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சென்னை என்றாலே அனைவருக்கும் சட்டென்று மெரினா கடற்கரையும், வண்டலூர் பூங்காவும், கோயம்பேடு பேருந்து நிலையமும், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுமே நினைவிற்கு வரும்.


ஆனால், சென்னையை நாம் அறியாத ஏராளமான இடங்கள் பல காலமாக இருந்து வருகிறது. அவற்றின் பட்டியலை நாம் கீழே காணலாம்.



  • சென்னையில் ஓடும் ஒரே ஒரு தனியார் பேருந்து :




சென்னை மாநகரம் முழுவதும் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், பூந்தமல்லி – பாரிமுனை பகுதியில் 54 என்ற வழித்தடத்தில் கடந்த ஒரே ஒரு தனியார் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. சுதந்திர காலத்திற்கு முன்பிலிருந்து இயக்கப்பட்டு வருவதால் இந்த பேருந்து இயங்கி வருகிறது.



  • 185 ஆண்டுகளை கடந்த தோட்டக்கலை சங்கம் :


சென்னையில் எப்போதும் பரப்பாக காணப்படும் ஜெமினி பாலம் அருகே வாகன ஓசைகளே கேட்காத அளவிற்கு அமைந்துள்ள அமைதியான இடம்தான் விவசாய தோட்டக்கலை சங்கம். கடந்த 185 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடம் அங்கு அமைந்திருப்பது என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. செம்மொழி பூங்காவிற்கு எதிராக அமைந்துள்ள இந்த தோட்டக்கலை சங்கம் பல ஏக்கரில் விரிந்துள்ளது. ஆயிரக்கணக்கான தாவரங்கள் உள்ளே உள்ளது.



  • பரங்கிமலை தேவாலயம் குகை




சென்னையில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மலை எனும் பரங்கிமலை மிகவும் புகழ்பெற்றது. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் இங்குள்ள குகையில் சில ஆண்டுகள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள பாறையில் பதிந்துள்ள பாதம் புனித தோமையரின் பாதம் என பக்தர்கள் நம்பி வணங்கி வருகின்றனர்.



  • பாடிகார்ட் முனீஸ்வரன் ஆலயம்




சென்னையில் ஏராளமான ஆலயங்கள் இருந்தும் சென்னையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வர் ஆலயத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாடிகார்ட் முனீஸ்வரர் ஆலயம் ஆங்கிலேயர்களின் எதிர்ப்பையும் மீறி பல்லவன் சாலையில் கட்டப்பட்ட ஆலயம் ஆகும். முனீஸ்வரன் தங்களது பாதுகாவலராக இருப்பதாக மக்கள் நம்புவதால் இந்த ஆலயத்திற்கு பாடிகார்ட் முனீஸ்வரன் என்று பெயர்.



  • அடையாறு உடைந்த பாலம்




தமிழ் திரையுலகின் பல படங்களில் பின்னணியில் அடையாறு ஆற்றைக் காட்டியவாறு ஒரு உடைந்த பாலம் காட்டப்பட்டிருக்கும். அடையாறில் உள்ள இந்த உடைந்த பாலம் மிகவும் புகழ்பெற்றது. எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற கடலோரம் வாங்கிய காற்று பாடல் இந்த பாலத்தில்தான் எடுக்கப்பட்டது. பழமையான இந்த பாலம் சேதமடைந்து உடைந்துவிட்டது. தற்போது உடைந்த பாலம் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.



  • ஆர்மேனியன் சர்ச்


ஆன்மீக வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ள சென்னையில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று பல மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன. ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்திய சென்னை டச்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது 1712ம் ஆண்டு பாரிமுனையில் கட்டப்பட்ட தேவாலயம்தான் ஆர்மேனியன் சர்ச். 300 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயமும் சென்னையின் பழமையான அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.



  • தியோசோபிக்கல் சொசைட்டி


அன்னிபெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்ட தியோசோபிக்கல் சொசைட்டி அடையாறில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் 1875ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தியோசோபிக்கல் சொசைட்டியில் ஆயிரக்கணக்கான தாவரங்கள் உள்ளது. புகழ்பெற்ற அடையாறு ஆலமரம் இதன் உள்ளேதான் உள்ளது. மனதிற்கு அமைதியான இந்த தியோசோபிக்கல் சொசைட்டியும் நூற்றாண்டுகளை கடந்த சென்னையில் அடையாளம் ஆகும்.



  • சிப்பிகளுக்கான அருங்காட்சியகம்




பூமியின் நிலப்பரப்பை காட்டிலும் நீர்பரப்பில்தான் அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளது. கடலில் கிடைக்கும் சிப்பிக்கு என்று பிரத்யேகமாக மகாபலிபுரத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் மெக்சிகோ, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனிசியா நாடுகளின் கடல்களில் கிடைத்த சிப்பிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



  • நடமாடும் நூலகம் :


பரப்பாக இயங்கும் சென்னையில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகம், அண்ணா நூலகம் அமைந்துள்ளது. அதேபோல, மக்களின் அறிவுப்பசியை தீர்க்கும் பொருட்டு சென்னையின் ஆவடி, மாதவரம், நாவலூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் இந்த வாகனம் ஓட்டப்பட்டு வருகிறது.