Chennai: சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று தகவல் தொழில்நுட்பத்திலும் சென்னை உலக அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது.
ஐடி துறையில் வளர்ச்சி
சென்னை நகரம் தொடர்ந்து, வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் பல்வேறு மாஸ்டர் பிளான் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை தகவல் தொழில்நுட்பத்தில், முன்னணி நகரமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாஸ்டர் பிளான்
அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகரத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) உலக தரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதற்கட்ட பணிகளை டிட்கோ தொடங்கியுள்ளது. உலக தரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான 'மாஸ்டர் பிளான்' டிசைன் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாதவரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் - Madhavaram Tech City
சென்னை மாதவரத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்க உள்ளது. இந்த இடத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சார்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்கா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான தரவு மையம், உலகளாவிய திறன் மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், தகவல் நுட்ப ஆய்வகம் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
வேகம் எடுக்கும் பணிகள்
தகவல் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான, முழு திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக அக்டோபர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) டெண்டர் கோரியது. இந்த டெண்டர் ஆறு நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த நிறுவனங்கள் வழங்கிய விவரங்களை பரிசீலனை செய்ததில், தற்போது சிங்கப்பூரை சேர்ந்த முன்னணி நிறுவனம் பெயர் வாங்கி உள்ளது.
மாஸ்டர் பிளான் தயாரிக்கும் நிறுவனத்திற்காக தேர்வாகியுள்ள நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்குள் ஒப்பந்த ஆணை வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அறிக்கை கிடைத்த பிறகு எப்ப செலவு உறுதி செய்யப்படும். விரைந்து தகவல் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ?
மாதவரத்தில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப நகரத்தின் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டம் தீட்டியுள்ளது. அதேபோன்று இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அருகே இந்த தகவல் தொழில்நுட்ப நகரம் அமைய உள்ளது. இங்கு உலக தரத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட உள்ளன.