புத்தாண்டு பிறந்து முதல் நாளே மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாதமும் இருமுறை சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு விலையை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து, குறைந்தும் வருகின்றன. 


அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டர் ரூ.25 அதிகரித்து ரூ.1,917க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


அதேபோல், டெல்லியில் 1,766 ரூபாய்க்கும், மும்பையில் 1,721 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 1880 ரூபாய்க்கும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விற்பனையாகிறது.


கடந்த மாதங்களில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. எனினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068-க்கு விற்பனையாகி வருகிறது.