சென்னை எழும்பூரில் உள்ள ராடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் ONDC எனப்படும் டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்த நெட்வொர்க் - இன் ஒரு பகுதியான ஆட்டோ புக்கிங் செயலி நம்ம யாத்ரி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் அறிமுகம் செய்து, இதில் இணைந்த ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் மேம்படுத்தப்பட்ட நம்ம யாத்ரி செயலி,  பயணிகளுக்கு குறைந்த செலவில் வசதியான போக்குவரத்தை வழங்கும். அதேநேரம், இந்த செயலி மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு தரகு கட்டணம் (ஒரு தரகு கட்டணம் என்பது பரிவர்த்தனைகளை செயல்படுத்த அல்லது சிறப்பு சேவைகளை வழங்க ஒரு தரகர் வசூலிக்கும் கட்டணமாகும்) வழங்க வேண்டிய தேவை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிக வருவாய் ஈட்ட முடியும். 


போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் ஏ. சண்முக சுந்தரம் ஐ.ஏ.எஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில், சென்னை யுனிஃபைட் மெட்ரோபொலிட்டன் அதாரிட்டியின் சிறப்பு அதிகாரியும், இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை அதிகாரியுமான ஐ.ஜெயக்குமார், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்ட இயக்குனர் சிவராஜா ராமநாதன், மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்தின், தென்னக தலைவர்  பாஸ்கர் வர்மா, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில்  நம்ம யாத்ரியின் முன்னணி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.


டிஜிட்டல் பணப்பறிமாற்ற முன்னணி நிறுவனமான ஜஸ்பே டெக்னாலஜீஸ் பங்களிப்புடன் நம்ம யாத்ரி செயலி 2 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநர்கள் மற்றும் 40 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து,  2.5 கோடிக்கும் அதிகமான பயணங்களுக்கு உத்தரவாதம் வழங்கி வருகிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் தரகு கட்டணமின்றி ஆண்டுக்கு ரூபாய் 360 கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட முடிந்தது. சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் இதுவரை இந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.


சென்னைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வள்ளுவர் கோட்டம், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, பிர்லா கோளரங்கம், கலங்கரை விளக்கம், டைடல் பார்க், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களுக்கு தமிழில் தொடர்பு கொள்ள முடியும் என்பது சிறப்பு அம்சம். 


இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் உரையாற்றும்போது, எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதர்களுக்கு பயன்பட வேண்டும் என்றார். சென்னையில் போக்குவரத்து  நெரிசல் மிகப்பெரிய சாவாலாக உள்ளது என்றும், சிஎம்டிஏ வின் எல்லை வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் கூறிய அவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகா வரை சி.எம்.டி ஏ தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் சென்னை அனுமதி பெற்ற ஆட்டோக்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குள் சென்று வர முடியும். 2013 ஆம் ஆண்டு அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணம் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஆட்டோ கட்டண மறு சீரமைப்பு  அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.  


ONDC இன் மேலாண் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான டி. கோஷி,  ONDC நெட்வொர்க்கில் உள்ள நம்ம யாத்ரி நகர்ப்புற இயக்கத்தை மாற்றியமைப்பதில் திறந்த நெட்வொர்க்குகளின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது என்றும், இது போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டார். 


ஜஸ்பேயின் தலைமை நிர்வாக அதிகாரியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவருமான விமல் குமார், நம்ம யாத்ரி செயலி சமூகம், அரசாங்கம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாகும் என்றும் தாங்கள் படித்து வளர்ந்த சென்னை நகரத்திற்கு அதைக் கொண்டு வந்ததில்  மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். 


நம்ம யாத்ரி செயலியில்  சுமார் 10,000 ஓட்டுநர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் 1 லட்சம் ஓட்டுநர்களை சேர்க்க  திட்டமிட்டுள்ளது. மேலும்   விரைவில் தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  


இந்த துவக்க விழாவில் ONDC இன் மூத்த துணைத் தலைவர் நிதின் நாயர், FIDE யின் தலைமை செயல் அலுவலர் சுஜித் நாயர், ஜஸ்பே யின் தலைமை செயல் அலுவலர் ஷீத்தல் லால்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.