நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தொகுதி பங்கீடுகள், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியை கையில் எடுத்திருக்கிறது பாஜக.


பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கவும் பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டனர்.



அண்ணாமலையுடன் வினோஜ்


சேகர்பாபுவிற்கு டஃப் கொடுத்த வினோஜ்


2021 சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரும் தற்போதைய அமைச்சருமான சேகர்பாபுவையே வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை பெற்று சில மணி நேரங்கள் திணறடித்த பாஜக-வை சேர்ந்த வினோஜ் பி செல்வம் மத்திய சென்னை தொகுதியை குறித்து வைத்து களமிறங்கியிருக்கிறார். பாஜக தனக்கு நிச்சயமாக அந்த தொகுதியை ஒதுக்கிவிடும் என்ற நம்பிக்கையில், அந்த பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்குவது, மக்களிடையே சென்று குறைகளை கேட்பது, மத்திய அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.


ஹனுமன் படத்திற்கு இலவச டிக்கெட்


அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா கண்டுள்ளதையொட்டி திரையரங்கில் வெளியாகியிருக்கும் ஹனுமன் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக மத்திய சென்னை மக்கள் ஆயிரம் பேருக்கு ஏ.ஜி.எஸ் தியேட்டரில் சினிமா பார்க்க இலவச டிக்கெட்டுகளை நேற்று வினோஜ் பி செல்வம் வீடு விடாக சென்று கொடுத்திருக்கிறார். மத்திய சென்னை தொகுதியில் வசிக்கும் இந்து மக்களின் ஓட்டுகளை கவரும் விதமாக அவர் இதுபோன்ற செயல்பாடுகளில் பரப்புரையை இப்போதே தொடங்கியிருக்கிறார்






திமுக பலமாக இருக்கும் மத்திய சென்னை


திமுக வாக்கு வங்கி பலமாக இருக்கும் மத்திய சென்னை தொகுதியில் இதுவரை திமுக வேட்பாளர்களே அதிக அளவில் வென்றுள்ளது வரலாறு. குறிப்பாக, முரசொலி மாறன், டாக்டர கலாநிதி உள்ளிட்டோர் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற தொகுதி இது. தற்போது திமுகவின் தயாநிதி மாறன் எம்.பியாக இருக்கிறது. இப்படி திமுக வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியை வினோஜ் பி செல்வம் குறி வைப்பதற்கு காரணம், அவர் 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட துறைமுகம் தொகுதியும் இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டுதான் வருகிறது என்பதால்தான்.


சவாலுக்கு தயாரான வினோஜ் - மத்திய சென்னை தொகுதியை பெற கடும் முயற்சி


ஒவ்வொரு முறையும் அதிமுக மத்திய சென்னை தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதையே வாடிக்கையாக வைத்திருந்த நிலையில், 2019ல் தனித்து போட்டியிட்டபோது இங்கு அதிமுக சார்பில் விஜயகுமார் போட்டியிட்டு வென்றார். இந்த முறை திமுக சார்பாக தயாநிதி மாறனே மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், வினோஜ் பி செல்வம் பாஜக சார்பில் அவரை எதிர்த்து களம் காண வேண்டிய கடினமான சூழல் வரும். ஆனாலும் அதையெல்லாம் எதிர்பார்த்துதான் தன்னுடைய சாய்சாக மத்திய சென்னை பகுதியை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.